கேரளா எனறால் நினைவுக்கு வருவது, ஆப்பம் தான். கேரளாவின் பிரபல காலை உணவாக விளங்கும் அப்பம், தமிழகத்தின் சில பகுதிகளிலும் பிரபலம் தான். இருந்தாலும், கேரள ஆப்பம் என்றாலே தனி மவுசு இருக்கத் தான் செய்கிறது. ஆப்பத்துக்கு இணையாக காய்கறி மசாலாக்களை சேர்த்து சுவைப்பது வழக்கம். ஆனால், இதை அசைவ இணைகளோடும் கேரள மக்கள் சுவைத்து வருகின்றனர்.
சுவையான, புசு புசு வெள்ளை ஆப்பம் செய்ய கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதுமானது. வாங்க ஆப்பம் சுடலாம்!
- முதல் தர அரிசிகளை மட்டுமே, ஆப்பம் தயாரிக்க பயன்படுத்துங்கள். அப்போது தான் பால் போன்ற வெள்ளை நிறமும், புதுச்சுவையும் நமக்கு கிடைக்கும்.
*புது அரிசியை நன்றாக கழுவிய பின், குறைந்தது 8 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
*ஊறவைத்த அரிசியை ஆட்டும் போது, தண்ணீருக்கு பதிலாக, தேங்காய் தண்ணீரை சேருங்கள்.
*நினைவில் கொள்ளுங்கள்! நீங்கள் அரைத்துக் கொண்டிருப்பது தோசைக்கு அல்ல, ஆப்பத்துக்கு. மறந்தும் வெந்தயத்தை சேர்க்காதீர்கள்.
*ஊற வைத்த அரிசியை ஃபிரிட்ஜினுள் தாராளமாக வையுங்கள். ஆப்பம் நன்றாக வர இது உதவும்.
*ஊற வைத்த அரிசியினை அரைக்கும் போது, வடித்த சாதம் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, ஆப்பம் மிருதுவாக வர உதவக்கூடியது. கூடவே, தேவையான அளவு உப்பையும், சிறிதளவு தேங்காய் பூவையும் சேர்க்கலாம்.
*அரைத்த மாவு நன்றாக புளித்தால் மட்டுமே, கேரள ஆப்பம் மாதிரி அவுட்புட் கிடைக்கும். மாவு புளிப்பதற்காக, தரமான ஈஸ்டினை பயன்படுத்தலாம். ஈஸ்ட் சேர்த்தாலும், அதன் தரத்தைப் பொறுத்து புளிப்பதற்கு 8-10 மணி நேரங்கள் ஆகலாம்.
*மாவு புளித்ததும் ஆப்பம் செய்ய தயாராகிவிடும். அதற்கு அரை மணி நேரம் முன்னதாக முன்னதாக, பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ளுங்கள். கூடவே, கொஞ்சம் பாலையும் சேர்க்கலாம். சத்துக்கள் நிரம்பிய உணவாகவே செய்து சாப்பிடலாம் அல்லவா!
*எல்லாம் செய்த பின், மாவினை எப்படி வைத்தீர்களோ, அப்படியே வைத்திருங்கள். கரண்டியை போட்டு கிளறி விட வேண்டாம். அப்போது தான் ஆப்பம் நன்றாக உப்பி வரும்.
*முக்கியமாக, ஆப்பம் செய்யும் எண்ணம் வந்த உடனேயே, ஆப்பச்சட்டியை எண்ணெய் பூசி நன்றாக காய வையுங்கள். அப்போது தான் ஆப்பம் சட்டியில் ஒட்டாமல், நன்றாக வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.