கேரளா கோழிக்கோட்டின் முடிவில் வயநாட்டின் தொடக்கத்தில் கையில் அரிவாள் கம்புடன் ஆளுயர சிலையாக நின்று கொண்டிருக்கும் கரிந்தண்டன்தான் வயநாட்டிற்கு பாதை அமைத்து கொடுத்தது என்ற வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
1750 ஆம் ஆண்டு கோழிக்கோடு - வயநாடு செல்வதற்கு மலைப்பகுதிகளுக்கு இடையில் பாதை எதுவும் இல்லாமல் இருந்தது. அப்போது வயநாட்டில் தேயிலை பயிர் செய்வதற்காக ஆங்கிலேயர் செல்ல முயன்றபோது கோழிக்கோடு எல்லையில் பாதை இல்லாமல் நின்றிருந்தனர். அங்கிருந்த மலைவாழ் மக்களிடம் செல்வதற்கு வழி கேட்டு யாரும் வழி சொல்லாத நிலையில் சிறுவன் ஒருவன் முன்வந்து ஆங்கிலேயர்களுக்கு வழி காட்ட அவர்களுடன் சென்றதாக கூறப்படுகிறது.
மலைகளுக்கு இடையே ஆங்கிலேயர்களை அழைத்துக் கொண்டு வயநாட்டின் எல்லை பகுதியை சிறுவன் சென்றடைந்த நிலையில் தாங்கள் வயநாட்டை அடைய பாதை ஏற்படுத்திக் கொடுத்தது சிறுவன்தான் என உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சன்மானம் சிறுவனுக்கு கிடைத்து விடுமோ என்ற அச்சத்தில் ஆங்கிலேயர்கள் கூட்டம், அச்சிறுவனை அங்கிருந்த ஒரு மரத்தில் சங்கிலியால் கட்டி சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த ஆங்கிலேயர்கள் கூட்டம் வழித்தடத்தை தாங்கள்தான் கண்டுபிடித்தோம் என உயர் அதிகாரிகளிடம் கூறி அதற்கான சன்மானத்தையும் பதவி உயர்வையும் பெற்றுள்ளனர். அன்று அச்சிறுவன் ஆங்கிலேயர்களுக்கு வழிகாட்டிய இடம்தான் தற்போதைய தாமரைச்சேரி ஆகும்.
மரத்தில் கட்டியபடி உயிரிழந்து கிடந்த சிறுவனின் உடல் மக்கிப்போய் நாளாக நாளாக சங்கிலியை மரத்திலிருந்து எடுக்க முடியாத அளவிற்கு மரம் வளர்ந்துள்ளது. இதனை வைத்து ஆங்கிலேயர் ஆட்சி காலம் முடிந்தபின் தாமரைச்சேரி வழித்தடத்தை கண்டுபிடித்தது அந்த சிறுவன் கரிந்தண்டன் தான் என்பதை அறிந்த மக்கள் சங்கிலிகள் பிணைக்கப்பட்ட மரத்தை கரிந்தண்டனின் நினைவாக வழிபட தொடங்கியுள்ளனர். மேலும் அவ்விடத்தில் கரிந்தண்டனின் நினைவாக ஒரு நினைவுச் சிலை எழுப்பி இன்னும் வழிபட்டு வருவதுடன் தற்போது அவ்விடம் ஒரு சுற்றுலாத் தலமாகவும் மாறியுள்ளது.