போதைப் பழக்கத்தின் பிடியில் சிக்கித்தவித்த பல ஆண்களுக்கு, சதுரங்க விளையாட்டு புதிய வாழ்வை அளித்து, அவர்களை நல்வழிப்படுத்தி உள்ளது. கேரளாவில் உள்ள மரோட்டிச்சல் (Marottichal) என்ற கிராமம், போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு வந்தவர்கள் சதுரங்கம் விளையாடி தங்களை மேம்படுத்திக் கொண்ட முன்மாதிரி கிராமமாக மாறியுள்ளது.
1970-களின் முற்பகுதியில், கேரளாவின் சிறிய கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான உன்னிகிருஷ்ணன் என்ற இளைஞர், சதுரங்க ஜாம்பவான் பாபி ஃபிஷரின் சாகசக் கதைகளால் ஈர்க்கப்பட்டார். ஃபிஷரின் சாதனைகளால் ஈர்க்கப்பட்ட அவர், சதுரங்கம் கற்றுக்கொள்வதற்காக அருகிலுள்ள கிராமத்திற்கு 25 கி.மீ. தூரம் பயணம் செய்தார். இதன் மூலம், தனது கிராமத்தில் சதுரங்க விளையாட்டை கற்றுக்கொண்ட முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
திருச்சூர் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் அமைதியான கிராமங்களிலொன்று மரோட்டிச்சல். 1960, 70-களில், இக்கிராமம் மற்ற பல பகுதிகளைப் போலவே கள்ளச்சாராயம் மற்றும் சூதாட்டப் பிரச்னைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. குடும்பங்கள் சிதைந்தன, வறுமை பெருகியது, சமூகத்தில் அமைதியற்ற சூழல் நிலவியது. தெருச்சண்டைகளும், ரவுடித்தனமும் சாதாரணமாகி விட்டன. இச்சூழலில், டீக்கடை உரிமையாளரான உன்னிகிருஷ்ணன் சதுரங்க விளையாட்டை கிராம மக்களிடையே அறிமுகப்படுத்தினார். தானே சதுரங்கம் கற்று, அதை மக்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்க தொடங்கினார். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி, அவர்களுக்கு ஒரு புதிய ஆர்வத்தை உருவாக்க, தனது சதுரங்க ஆர்வத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை அவர் உணர்ந்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/25/kerala-village-2025-06-25-15-09-25.jpg)
ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய கிராம மக்கள், படிப்படியாக சதுரங்க விளையாட்டின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினர். இந்த விளையாட்டு அவர்களின் கவனத்தை போதைப் பழக்கங்களிலிருந்து திசைதிருப்பி, அறிவார்ந்த சிந்தனையையும், மன ஒருமைப்பாட்டையும் வளர்த்தது. உன்னிகிருஷ்ணனின் அயராத முயற்சியால், குறுகிய காலத்திலேயே மரோட்டிச்சல் கிராமத்தில் 90% க்கும் அதிகமான மக்கள் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டனர்.
இன்று, மரோட்டிச்சல் கிராமத்தில் 90%-க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் சதுரங்கம் விளையாடத் தெரிந்தவர்கள் என உன்னிகிருஷ்ணன் கூறுகிறார். ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவராவது சதுரங்கம் விளையாடத் தெரிந்தவர். சுமார் 1,500 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், 4000-க்கும் மேற்பட்ட மக்களைச் சென்றடைந்துள்ளது.
சதுரங்கம், அவர்களின் வாழ்க்கையில் ஆரோக்கியமான 'போதை'யாக மாறியது. இது குடும்பங்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்தியதுடன், சமூக மாற்றத்திற்கும் வழிவகுத்தது. இன்றும், இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் தேநீர் கடைகளிலும், பொது இடங்களிலும் கூடி, நேரம் வீணடிக்காமல் சதுரங்கம் விளையாடுவதைப் பார்க்க முடிகிறது.
இன்றும் நீங்கள் மரோட்டிச்சலுக்குச் சென்றால், சாலை ஓரங்களில் பேருந்து ஓட்டுநர்கள், பள்ளி மாணவர்கள், இல்லத்தரசிகள் எனப் பலரும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். கிராம மக்கள் அன்புடன் ‘உன்னி மாமன்’ என்று அழைக்கும் உன்னிகிருஷ்ணன், 4 வயதுக் குழந்தைகளுக்கும், நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவிட விரும்பும் 70 வயதுப் பெரியவர்களுக்கும் சதுரங்கம் கற்பித்து வருகிறார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/25/kerala-village-2-2025-06-25-15-10-05.jpg)
மரோட்டிச்சல் கிராமம் இன்று "இந்தியாவின் சதுரங்க கிராமம்" என்றழைக்கப்படுகிறது. ஒரு டீக்கடைக்காரரின் தொலைநோக்குப் பார்வை கிராமத்தையே மாற்றியமைத்து, போதை மறுவாழ்வுக்கு சதுரங்கம் ஒரு சக்திவாய்ந்த கருவியாகச் செயல்பட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. இந்த மாற்றம், மற்ற பகுதிகளுக்கும் ஒரு உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.