அன்றாடம் நாம் செய்யும் கிட்சன் பணிகளை எப்படி எளிமையாகவும், சுலபமாகவும் மாற்றுவது என தற்போது பார்க்கலாம்.
பெரும்பாலும் ஒரு வாரத்திற்கு தேவையான கொத்தமல்லி புதினா இலைகளை வாங்கி ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் எல்லோரிடமும் இருக்கும். ஆனால், இவை தொடர்ந்து ஃப்ரிட்ஜில் இருக்கும் போது ஃப்ரெஷ்ஷாக இருக்காது. இதற்காக கடைகளில் கிடைக்கும் க்ளீன் ஃப்லிம் எனக் கூறப்படும் கண்ணாடி பேப்பரை வாங்கி பயன்படுத்தலாம். இதில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து கொத்தமல்லி, புதினாவை அதில் சுற்றி வைக்கலாம். இதன் மூலம் சுமார் இரண்டு வாரங்களுக்கு கொத்தமல்லி, புதினா ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
சில நேரத்தில் எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டிய பின்னர், அதனை பிழிந்து சாறு எடுப்பது கடினமாக இருக்கும். அந்த நேரத்தில் அப்பளம் எடுக்க பயன்படும் இடுக்கியை எடுத்து அதற்கு இடையே எலுமிச்சை பழத்தை வைத்து பிழிந்தால், சாறு எடுக்க எளிதாக இருக்கும்.
குக்கரில் பருப்பு உள்ளிட்டவற்றை வேக வைக்கும் போது, அவை குக்கர் மூடியின் உட்புறத்தில் பட்டு வீணாகும். மேலும், இதனை கழுவும் போதும் சிரமமாக இருக்கும். இதனை தடுப்பதற்கு, குக்கர் மூடியின் உட்புறத்தில் லேசாக நல்லெண்ணெய் ஊற்றி அதை அனைத்து பகுதிகளிலும் தேய்த்து விடலாம். இப்படி செய்தால் பருப்பு வீணாகாமல் குக்கரிலேயே இருக்கும்.
சில நேரத்தில் பால் காய்க்கும் போது, நாம் சுதாரித்துக் கொள்வதற்கு முன்னரே அவை பொங்கி வீணாகி விடும். இதனையும் எளிதாக தடுக்க முடியும். அதன்படி, பால் பாத்திரத்தின் மீது ஒரு மரக்கரண்டியை வைத்து விட்டால், அதை தாண்டி பால் பொங்கி வழியாது. இல்லையென்றால், பாத்திரத்தின் ஓரங்களில் சிறிது வெண்ணெய் தடவினாலும் பால் பொங்காமல் இருக்கும்.