/indian-express-tamil/media/media_files/2025/10/04/download-2025-10-04t161-2025-10-04-16-15-09.jpg)
வீட்டுக்குள் ஏற்படும் விபத்துகளில் சமையலறையில் எல் பி ஜி கேஸ் கசிவும் சிலிண்டர் தீப்பிடிப்பும் மிகக் கடுமையானவை. இத்தகைய அபாயகரமான சம்பவங்களை தடுப்பதும், நேர்ந்தால் சரியாக எதிர்கொள்வதும் மிகவும் அவசியம்.
சிலிண்டர் தீப்பிடிப்புக்கு முக்கிய காரணமாக கேஸ் கசிவே இருக்கிறது. எனவே, சமையலறையில் கேஸ் வாசனை சிறிதுமட்டும் உணர்ந்தவுடன் உடனே சிலிண்டர் வால்வை மூட வேண்டும். பின்னர் சமையலறை ஜன்னல், கதவுகள் முழுமையாக திறக்கப்பட வேண்டும். சமையலறையில் வாயு மெதுவாக பரவுவதால், எந்தவொரு மின் சாதனங்களின் சுவிட்சையும் அணைக்கப்பட வேண்டும். கூடுதலாக, சிகரெட் லைட், மெழுகுவர்த்தி, அகல் விளக்கு போன்றவற்றை ஏற்ற கூடாது. சிறு பொறி கூட கேஸில் தீப்பிடிப்புக்கு காரணமாகலாம்.
தீயை அணைக்கும் போது முதலில் பதற்றமடைவதைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் அல்லாத திரைச் சீலை, படுக்கை விரிப்பு அல்லது கோணிப்பை போன்றவற்றை தண்ணீரில் நனைத்து, காற்றடிக்கும் திசைக்கு எதிராக நின்று, சிலிண்டரின் தலைப்பகுதியை முறையாக மூடி விட வேண்டும். இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல், கசிவதில் இருக்கும் கேஸ் தீயை எரிக்க விடாது. வீட்டில் சிஓ 2 தீ அணைப்பான் கருவி இருந்தால் அதை பயன்படுத்தி தீ அணைக்க முயற்சிக்கலாம்.
பின்னர் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்று, கேஸ் ஏஜென்சி அல்லது தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களே இத்தகைய நிலைகளை சரிசெய்யவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முன்வருவார்கள்.
கேஸ் கசிவைத் தடுக்கும் சில முக்கியமான ஆலோசனைகள்:
- வருடத்திற்கு ஒருமுறை அடுப்பு, ரெகுலேட்டர், ரப்பர் ஹோஸ் போன்ற சாதனங்களைப் பரிசோதித்து பழுதுகள் இருந்தால் உடனே சரி செய்ய வேண்டும்.
- சிலிண்டரின் காலாவதி தேதியை நன்கு கவனிக்க வேண்டும்.
- இரண்டு சிலிண்டர்களை ஒரே இடத்தில், மேடைக்கு அடியில் வைத்து விடுவது தவறு.
- சிலிண்டரை நிற்பது போலவே பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.
- கேஸ் கசிவை உடனடியாக அறிவிக்கும் காசு கண்டறியும் கருவி பயன்படுத்துவது பாதுகாப்புக்கு உதவும்.
- சிலிண்டர் வால்வுகள் சரியாக செயல்படுகிறதா என்பதை சிலிண்டர் விநியோகஸ்தர் மூலம் ஒவ்வொரு முறையும் சரிபார்க்கவும்.
- சிலிண்டரை வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது நிற்பது போன்ற நிலையில் வைப்பது அவசியம்.
சமையலறையில் பெண்கள் அதிக நேரம் செலவிடும் பழக்கம் இருப்பதால், இவர்கள் இந்த பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். கேஸ் கசிவை உணர்ந்தால் மன தைரியம் இழக்காமல் உடனே வெளியில் வந்து உதவி நாடுவதே சிறந்தது.
இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்படும்போது, சமையலறை விபத்துக்களை தடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். நம் குடும்பங்களின் பாதுகாப்புக்காக இந்த அறிவுரைகளை விரிவாக பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.