கிட்சன் பராமரிப்பில் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சில டிப்ஸ்கள் குறித்து தற்போது காணலாம். இவை நம் அன்றாட வேலையை எளிமையாக்குகின்றன. இதனால் மற்ற வேலைகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.
வீட்டில் இருக்கும் மின்விசிறியை சுத்தப்படுத்துவது என்பது மிகவும் சவாலான காரியம். இதற்காக மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய சூழல் ஏற்படும். அந்த வகையில் மின்விசிறியை நாமே எப்படி சுலபமாக சுத்தம் செய்வது என தற்போது பார்க்கலாம்.
இதற்காக நாம் பயன்படுத்திய பழைய லெக்கின்ஸ் பேன்ட் இருந்தால் போதும். அதைக் கொண்டு மின்விசிறியை ஈஸியாக சுத்தம் செய்யலாம். லெக்கின்ஸின் அகலமான பகுதியை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் கீழே சிறிதாக இருக்கும் பகுதியை ஒரு மடிப்பு எடுத்து ஸ்டாபிளர் பின் அடித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் சிறு தையல் போட்டுக் கொள்ளலாம்.
இப்போது, வெட்டி எடுத்த லெக்கின்ஸின் வெளிப்பக்கத்தை உட்புறமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதையடுத்து, ஒரு சேர் அல்லது ஸ்டூல் மீது ஏறி மின்விசிறியின் ஒவ்வொரு இறக்கை பகுதியிலும், நாம் முதலில் வெட்டி எடுத்துக் கொண்ட லெக்கின்ஸை மாட்டி விட்டு, பின்னர் அப்படியே மெதுவாக இழுக்க வேண்டும். இப்படி செய்தால் மின்விசிறியில் இருக்கும் அழுக்குகள் முற்றிலும் நீங்கி விடும்.
மேலும், கிட்சனில் இருக்கும் பழங்கள், இனிப்பு வகைகள் போன்ற பொருள்களில் அதிகமாக பூச்ச்சிகள் வரும். இவற்றை எளிமையாக விரட்டி விட முடியும். எலுமிச்சை பழத்தை எடுத்து அதை பாதியாக வெட்ட வேண்டும். இப்போது, கிராம்புகளை எடுத்து முதலில் வெட்டி வைத்திருந்த எலுமிச்சை பழத்தின் உட்பகுதியில் குத்தி வைக்கலாம். இந்த எலுமிச்சை பழத்தை பூச்சிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பூச்சிகளை விரட்டி விடலாம்.