/indian-express-tamil/media/media_files/2025/10/01/durga-puja-coimbatore-2025-2025-10-01-19-36-47.jpg)
கொல்கத்தா துர்கா பூஜைபோல கோவையில் களைகட்டிய நவமி: பெங்காலிப் பெண்கள் நடனமாடி வழிபாடு!
வங்க மொழி பேசும் மக்களுக்கு சிறப்பு வாய்ந்த பண்டிகையான துர்கா பூஜை, கொல்கத்தாவில் கொண்டாடப்படுவதைப் போலவே, தற்போது கோவையிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழில் நிமித்தம் காரணமாக கொல்கத்தாவில் இருந்து கோவைக்கு இடம் பெயர்ந்து வந்த பெங்காலி மக்கள், தங்களால் சொந்த ஊருக்குச் சென்று பூஜையில் பங்கேற்க முடியாத காரணத்தால், கோவையிலேயே பிரம்மாண்ட அரங்கம் அமைத்து துர்கா பூஜையை நடத்தி வருகின்றனர். 5 நாட்கள் நடைபெறும் இந்த பூஜை நேற்று நவமி அன்று கோலாகலமான உச்சத்தை அடைந்தது.
நவமி நாளான நேற்று காலை முதலே துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பெங்காலி மொழி பேசும் வட மாநிலப் பெண்கள் பாரம்பரிய உடையில் வந்து, அம்மனுக்கு மந்திரங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்ததுடன், பாரம்பரிய நடனம் ஆடியும் வழிபட்டனர். பகல் நேரத்தில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இரவில், மக்களை மகிழ்விக்கும் விதமாக நெருப்பு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிகளுக்காக கொல்கத்தாவில் இருந்து பிரத்தியேகமாக ஆர்கெஸ்ட்ரா குழுவும் வரவழைக்கப்பட்டிருந்தது.
பூஜைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவு பரிமாறுவதற்காக, கொல்கத்தாவில் இருந்து பிரத்தியேக சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 10,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்தத் துர்கா பூஜையில் பெங்காலி மக்கள் மட்டுமின்றி, கோவையின் உள்ளூர் மக்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் ஆர்வத்துடன் வந்து, துர்க்கை அம்மனைத் தரிசித்துச் சென்றனர். இந்த ஏற்பாடுகள் கோவையிலேயே கொல்கத்தா உணர்வை ஏற்படுத்தியதாக பெங்காலி மக்கள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.