கிழக்குத் தொடர்ச்சி மலையின் அழகிய பகுதியான கொல்லிமலை, அதன் இயற்கை எழிலுக்காக மட்டுமல்லாமல், பயணிகளின் சவாலான மலைப் பாதைக்காகவும் பிரசித்தி பெற்றது. இந்தச் சாலையில் ஏறக்குறைய 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அனுபவம் வாய்ந்த வாகன ஓட்டிகளுக்கு கூட ஒரு சவாலான அனுபவத்தை ஏற்படுத்தும் இந்த வளைவுகள், கொல்லிமலையின் தனித்துவமான அடையாளமாகத் திகழ்கின்றன. திரில் விரும்பிகள் பயணிக்க விரும்பும் சாலையாக இந்த சாலை விளங்குகிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், செங்குத்தான மலைப்பகுதிகளில் சாலை அமைப்பது ஒரு பெரிய சவாலாக இருந்தது. அப்போது, மலைச்சரிவில் வாகனங்கள் எளிதாக ஏறவும், பாதுகாப்பாக இறங்கவும், இந்த கொண்டை ஊசி வளைவுகள் பொறியியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டன. ஒரு பெண்ணின் கொண்டையில் செருகப்படும் ஊசியின் வளைவு போன்று இந்தச் சாலைகள் இருப்பதால், இது "கொண்டை ஊசி வளைவுகள்" எனப் பெயர் பெற்றது. இந்த வளைவுகள், மலையைச் சுழற்சி முறையில் மேல்நோக்கி ஏற உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திருப்பமும் 90 டிகிரி (அ) அதற்கு மேற்பட்ட கோணத்தில் கூர்மையாக இருப்பதால், இவை "ஊசி வளைவுகள்" என்றும் அழைக்கப்படுகின்றன.
தஞ்சாவூர், நாமக்கல், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த மலைப்பாதை ஒரு அசாத்தியமான பயண அனுபவத்தை வழங்குகிறது. பகல் நேரங்களில், சுற்றியுள்ள இயற்கை அழகை ரசித்தபடி பயணம் செய்வது ரம்மியமான அனுபவம். ஆனால், இரவு நேரங்களில் இந்தச் சாலையில் பயணம் செய்வது கூடுதல் கவனத்தையும், அனுபவத்தையும் கோரும் ஒன்றாகும். இந்த 70 வளைவுகளை கடந்து, கொல்லிமலையின் உச்சியை அடைந்த பிறகு கிடைக்கும் மனநிறைவும், இயற்கை காட்சிகளும் இந்தச் சவாலான பயணத்தை முழுமையாக்குகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய இடமாக மட்டுமல்லாமல், சாலைப் பொறியியலின் சிறந்த உதாரணமாகவும் கொல்லிமலையின் இந்தச் சாலைகள் திகழ்கின்றன.