Kothamalli Thokku | benefits-of-corianders-leaves: தனியா அல்லது கொத்தமல்லி என்று அழைக்கப்படும் இந்த அற்புத மூலிகை பொருள் நம்முடைய அன்றாட உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவை இல்லாமல் எந்தவொரு வீட்டு சமையலறையையும் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நிச்சயமாக கூறலாம். அந்த அளவிற்கு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ள இந்த கொத்தமல்லி ஒவ்வொரு உணவுக்கு சுவை கூட்டும். தவிர, இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த அற்புதமான கொத்தமல்லியை வைத்து சுவையான தொக்கு எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 1 கட்டு
வர மிளகாய் - 10
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
பூண்டு - 10 பற்கள்
பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கட்டு கொத்தமல்லியை எடுத்து தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து அதன் காம்பை நறுக்கி விடவும். பின்னர், அதனை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்கவும்.
தொடர்ந்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பிறகு, ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கொத்தமல்லியை போட்டு லேசாக வதக்கவும். மல்லி சுருள வதங்கியதும், அதை தனியாகஎடுத்து தட்டில் வைத்து விடவும்.
பின்னர் அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, வர மிளகாய் சேர்த்து உப்பி வர லேசாக வறுத்துக் கொள்ளவும்.
அதையும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, அதே எண்ணெயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
இதன் பின்னர் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை அதே எண்ணெயில் வதக்கி, அதனுடன் தேவையான அளவிற்கு எண்ணெயில் கட்டியாகவோ அல்லது தூளாகவோ சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு, ஒரு மிக்ஸி ஜாரில் மல்லியைத் தவிர, எண்ணெயில் வதக்கிய மற்ற எல்லா பொருட்களையும் சேர்க்கவும்.
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றுடன் பூண்டு பற்களையும் தோலைரித்து சேர்க்கவும்.
இந்த கலவைக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் நொறுநொறுவென பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மல்லியையும் சேர்த்து ஒருமுறை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதன்பிறகு, அவற்றை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்தால் நீங்கள் எதிர்பார்த்த கொத்தமல்லி தொக்கு ரெடி. அவை நன்கு உலர்ந்து ஈரப்பதம் இல்லாமல் ஆனதும் ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து, நீங்கள் விரும்பும்போது எல்லாம் எடுத்து ருசிக்கலாம்.
அத்துடன், இந்த டேஸ்டியான கொத்தமல்லி தொக்கு சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு சூப்பராக இருக்கும். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணுங்க மக்களே...!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“