2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கலை கட்டியது.
கோவை மாநகரிலும் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் இருந்து கோவையில் பல்வேறு கோவில்களில் மக்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் பிரசித்தி பெற்ற ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை உள்ள புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அருகம்புல் மாலை, 108 தேங்காய்களால் ஆன மாலை மற்றும் புஷ்ப மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோல், ஆங்கில பிறப்பை முன்னிட்டு விடியற்காலை முதல் வரிசையில் இன்று புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆங்கிலப் புத்தாண்டு 2025 பிறந்ததை முன்னிட்டு புதுச்சேரியின் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் மணக்குள விநாயகருக்கு விடியற்காலை சிறப்பு பூஜை செய்து, தங்க கவசம் சாத்தப்பட்டது.
புத்தாண்டு அன்று மணக்குள விநாயகரை வழிபட புதுச்சேரி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விடியற்காலை முதல் இருந்தே நீண்ட வரிசையில் நின்று வணங்கிச் செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்கேற்ப கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்புகள் வைக்கப்பட்டு, சுவாமியை வழிபட சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். மணக்குள விநாயகரை வழிபட்டு வெளியேறும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் எந்தவித அசம்பாவிதங்களையும் சந்திக்காத வகையில் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பக்தர்களை வழி அனுப்பி வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை; பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“