கோவையை நேரு விளையாட்டு அரங்கம் அருகே ஆர்.எம்.கார்ஸ் என்ற கார் கூடுதல் பொருத்துதல் வடிவமைத்தல் நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கார்களின் வண்ண விளக்குகள், ஸ்பீக்கர்களை வடிவமைத்து தருகின்றனர்.
இந்நிலையில் தேசிய அளவில் நடைபெற்ற கார் வடிவமைத்தல் நிறுவனம் போட்டியில் பங்கேற்று 9 விருதுகளை வென்றுள்ளனர். பிப்ரவரி மாதம் 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் "EMMA" என்ற நிறுவனம் கார் கூடுதல் பொருத்துதல் வடிவமைத்தல் நிறுவனம் போட்டி நடத்தியது.
இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கார் கூடுதல் பொருத்துதல் வடிவமைத்தல் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டி, Entry, Expert, Skilled, Master ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் ஆர்.எம்.கார்ஸ் கம்பெனியினர் 21 கார்களுடன் போட்டியில் பங்கேற்ற நிலையில் 9 கார்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆர்.எம்.கார்ஸ் கம்பெனியினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இது குறித்து பேசிய ஆர்.எம்.கார்ஸ் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் நயீம், இந்த போட்டி நடக்கவுள்ளது என தெரிய வந்தபோது எங்களிடம் வெறும் 6 கார்கள் மட்டுமே இருந்ததது. பின்னர் எங்களுடைய வாடிக்கையாளர்கள் அவர்களது கார்களை கொடுத்ததால் 21 கார்களுடன் இந்த போட்டியில் பங்கேற்று 9 விருதுகளை வென்றுள்ளோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதற்காக எங்கள் நிறுவனத்தில் பணிபுரிவோர் சுமார் 2 வாரத்திற்கும் மேல் பணியாற்றி போட்டிக்காக கார்களை வடிவமைத்தனர். மேலும் வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் தங்கள் முயற்சியுடனும் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்போம் எனவும் நயீம் கூறினார்.
இவர்கள் இதற்கு முன்பு குடியரசு தினத்தை முன்னிட்டு இவர்களது கார் ஒன்றில் தேசிய கொடி வண்ணங்களில் விளக்குகளை பொருத்தி பெண் சுதந்திர போராட்ட வீராங்கனைகள் உட்பட பல்வேறு சுதந்திர போராட்ட வீரார்கள் தியாகிகள், கோவையை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் வீடியோக்களை ஒளிபரப்பி பலரது வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“