கோவை தடாகம் பன்னிமடை பகுதியில் சுற்றி திரியும் காட்டு யானையை அடர் வனப் பகுதிக்குள் விரட்டுவதற்காக கும்கி யானை அழைத்து வரப்பட்டது.
கோவை மாவட்டத்தில் தடாகம் பன்னிமடை சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன. சில சமயங்களில் மனிதர்களை தாக்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை பன்னிமடை அடுத்த தாளியூர் பகுதியில் அதிகாலை சாலையில் நடந்து சென்ற நடராஜன் முதியவரை வனப் பகுதிக்குள் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று கூடிய நிலையில் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கும்கி யானை அழைத்து வரப்பட்டு அந்த ஒற்றைக் காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இந்நிலையில் டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து முத்து என்கின்ற கும்கி யானை தடாகம் பன்னிமடை பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. இந்த கும்கி யானையை கொண்டு அப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனப்பகுதிக்குள்ளேயே கட்டுப்படுத்தியும் வனப்பகுதியில் இருந்து வெளியேறாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.