கோவையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் விதமாக விடிய விடிய தயாரான மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணியை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை உலகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று கோவையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இந்த நிலையில், கோவையில் உள்ள பள்ளிவாசல்களில் விடிய விடிய ரமலான் பண்டிகைக்கான விருந்து தயாரானது. கோவையின் பல்வேறு பகுதிகளில் நண்பர்கள் குழு, சமூக நல்லிணக்க குழுக்கள், கோட்டைமேடு வின்செண்டு ரோடு ஹவுசிங் யூனிட் குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட குழுக்களால் அசைவ விருந்துக்கான உணவுகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன.
கோவை போத்தனூர், உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து படைக்கும் விதத்தில், உணவு தயார் செய்யப்பட்டிருக்கின்றன. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, கேசரி உள்ளிட்ட உணவுகள் தயார் செய்யப்பட்டு, காலை 10 மணி முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. நோன்பு திறக்கும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பசியுடன் வாடும் அனைத்து மத மக்களுக்கும் இந்த உணவு இன்று வழங்கப்பட்டது.
நோன்பிருந்து பசியின் அருமையை உணர்ந்த இஸ்லாமியர்கள், இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் நிலையில், யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இதனை செய்கின்றனர்.
ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் 10 முதல் 30 ராட்சத பாத்திரங்களில், விடிய விடிய கம கமவென பிரியாணி தயார் செய்யப்பட்டிருக்கின்றன. சிறப்பு தொழுகை முடித்த கையோடு வரும் இஸ்லாமியர்கள், பள்ளிவாசல்களுக்கு சென்று பக்கெட்களில் பிரியாணி வாங்கி சென்று, அவர்கள் மட்டுமின்றி அக்கம் பக்கத்தினருக்கும் தந்து, இன்றைய தினம் ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். உணவளிப்பதில் இறைவன் மிகச் சிறந்தவன் என்ற அடிப்படையிலும் இதனை செய்யும் இவர்கள், உணவளிப்பதில் மிகுந்த ஆர்வத்தினை வெளிப்படுத்தி இரவு முதலே விடிய விடிய கமகமவென பிரியாணியை தயார் செய்து, 10 மணி முதல் விநியோகம் செய்ய தயாராகி விட்டனர்.
அசைவ விருந்தை நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, கோவையில் வாழும் அனைத்து சமுதாய மக்களுக்கும் உணவு பரிமாறுகின்றனர். மாநகர பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கி ரமலான் பண்டிகை கொண்டாடுகின்றனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“