உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோவையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் புற்றுநோயாளிகளுக்காக தலை முடி தானம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் செவிலியர்கள் பணிகள் குறித்தும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை பகுதியில் உள்ள அபிராமி செவிலியர்கள் கல்லூரி சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலை முடி தானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. வரும் மே 12 ஆம் தேதி வரை கோவை மண்டலத்தில் நடைபெறும் தலைமுடி தான நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த பெண்கள் தலைமுடி தானம் செய்கின்றனர்.
இதில் முதல் கட்டமாக 15 செவிலியர் கல்லூரி ஆசிரியர்கள், 150 செவிலியர் மாணவிகள் தங்கள் தலைமுடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கினர். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அழகுகலை பெண் நிபுணர்கள் மாணவிகளின் தலைமுடிகளை வெட்டி எடுத்ததோடு, அதை அழகுபடுத்தியும் முடி வெட்டுவதால் மாணவிகளுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையையும் நீக்கினர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“