43 ஆயிரம் பேர் உடல் உறுப்புகளுக்காக விண்ணப்பித்து காத்திருப்பில் உள்ளதாகவும், உடல் உறுப்புகள் தானம் குறித்து பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவைபடுகிறது எனவும் தனியார் மருத்துவமனையின் மருத்துவர் முருகதாஸ் சண்முகம் தெரிவித்துள்ளார்.
உலக சிறுநீரக தினமாக மார்ச் 14 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதன் நிகழ்வாக கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஃபிம்ஸ் (FIMS) மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர்த்து 10 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கும் சிகிச்சை மையத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
ஃபிம்ஸ் மருத்துவனையின் மருத்துவர் மற்றும் தலைவர் முருகதாஸ் சண்முகம், மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சகுந்தலா, மருத்துவமனையின் இயக்குனர் ரஷ்மி, மற்றும் சிறுநீரக மருத்துவர் பிரபாகரன், வழக்கறிஞர் நவமணி ராசு ஆகியோர் தீவிர கண்காணிப்பு சிகிச்சை மையத்தை துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் முருகதாஸ் சண்முகம் செய்தியாளர்கள் சந்தித்து கூறியதாவது, “இன்று திறக்கப்பட்ட இம்மையத்தில் உடல் உறுப்பு தானம் பெற்ற பின்னர் அவர்களுக்கு பொருத்தப்பட்ட உடல் உறுப்புகள் இயங்குகின்றதா, உடலில் என்னென்ன மாற்றங்கள் உள்ளது என்பதை கண்காணிக்கும் ஐ.சி.யு பிரிவு துவங்கபட்டுள்ளது.
இரு முறைகளில் உடல் உறுப்புகள் தானம் பெறலாம், ஒன்று குடும்ப உறுப்பினர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறுவது, அடுத்தது தமிழ்நாடு அரசு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்து உங்களுக்கான உடல் உறுப்புகளை பெறுவது. இதில் இரண்டாவது முறையில் பெறுவதற்கு தற்போது 43 ஆயிரம் பேர் தற்போது விண்ணப்பித்து உடல் உறுப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.
இவர்களுக்கு உடல் உறுப்புகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக பொதுமக்களுக்கு உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லாததுதான். தற்போது மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்குபவர்களின் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு முன்வந்து நடத்தி வருவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக உடல் உறுப்புகள் தானம் செய்ய அனைவரும் முன் வர வேண்டும் என்று இவ்வாறு மருத்துவர் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“