ஆவணி மாதத்தில், தேய்பிறை அஷ்டமி நாளில், ரோகிணி நட்சத்திரத்தில், பகவான் கிருஷ்ணரின் திரு அவதாரம் நிகழ்ந்தது எனத் தெரிவிக்கிறது புராணம்.
இந்த நாளில் எவர் வீடுகளில் கிருஷ்ணர் பாதம் வரைந்து பூஜை செய்யப்படுகிறதோ, அவர்களின் வீடுகளுக்கு பகவான் கிருஷ்ணர் வந்து சகல சுபிட்சங்களையும் தந்தருள்கிறார் என்பதாக ஐதீகம்.
பகவானின் பிறப்பு நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஆவணி தேய்பிறை அஷ்டமி நாளில், ரோகிணி நட்சத்திர வேளையில், வீடுகளில் கிருஷ்ண ஜயந்தியைக் கொண்டாடத் தயாராவார்கள் பக்தர்கள். வீட்டையெல்லாம் சுத்தம் செய்த பிறகு, வாசலில் மாவிலைத் தோரணம் கட்டிய பின்னர், கரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவால், கிருஷ்ணர் பாதம் வரைவார்கள்.
எப்படி வரைவது?
கோலத்தை மோதிர விரலில் எடுத்துக்கொண்டு, ‘8’ போல போட்டுக் கொள்ளுங்கள். பிறகு 8க்கு மேலே சின்னச்சின்னதாக நான்கு பொட்டு வையுங்கள். ஐந்தாவதாக கொஞ்சம் பெரிய பொட்டு வையுங்கள். பார்ப்பதற்கு, குழந்தையின் பாதம் போலவே இருக்கும்.
எனவே இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் மாவிலைத் தோரணம் கட்டி, வாசல் தொடங்கி பூஜையறை வரை, கிருஷ்ணர் பாதம் வரைந்து, பூஜை செய்யுங்கள். சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வான் கோபாலன் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“