உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதத்தில், ரோகிணி நட்சத்திரத்தில், தேய்பிறை அஷ்டமியில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்கிறது புராணம்.
அந்தவகையில் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை, ஆகஸ்ட் 26 (திங்கள் கிழமை) அன்று உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் கோலகலமாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு
இந்த புனித நாளில், வீட்டை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். வாசலில் இருந்து பூஜையறை வரை, கிருஷ்ணர் பாதம் வரைந்து கொள்ள வேண்டும். இதனை, மாக்கோலத்தில், அதாவது பச்சரிசி மாவு அரைத்து, அதில் தண்ணீர் கலந்து வரைய வேண்டும்.
மேலும், குழந்தை கிருஷ்ணரின் சிலைகளை கழுவி, புத்தாடை அணிவித்து, தொட்டிலில் வைப்பார்கள். பூஜையறையில் கிருஷ்ணரின் படத்துக்கு மாலை சூட்டி, பொட்டு வைத்து தீப தூப ஆராதனை செய்ய வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/4LQeQ690hQBlU9GSd5Xn.jpg)
கிருஷ்ண ஜெயந்தித் திருநாளன்று, எவர் வீடுகளில் கிருஷ்ணர் பாதம் வரைந்து பூஜை செய்யப்படுகிறதோ, அவர்களின் வீடுகளுக்கு பகவான் கிருஷ்ணர் வந்து சகல சுபிட்சங்களையும் தந்தருள்கிறார் என்பதாக ஐதீகம்.
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார். இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும்.
வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம்.
கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.
பூஜை நேரம்
இந்த ஆண்டு கோகுலாஷ்டமி திங்கட்கிழமை ஆகஸ்ட் 26-ம் தேதி வருகிறது. திங்கட்கிழமை காலை 9.12 மணி வரை சப்தமி திதி. அதன் பிறகு அஷ்டமி திதி தொடங்குகிறது. அது மறுநாள் ஆகஸ்ட் 27 காலை 7.30 மணி வரை நீடிக்கிறது. எனவே 26 மாலை கோகுலாஷ்டமி கொண்டாடுவதே சிறப்பு. எப்போது இரவு அஷ்டமி இருக்கிறதோ அப்போதுதான் கொண்டாட வேண்டும் என்பது நியதி.
கிருஷ்ண ஜெயந்தி அன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம்
*அச்யுதம் கேஷ்வம் கிருஷ்ணா தாமோதரம் ராம நாராயணம் ஜாங்கி வல்லபம்..!!
*ஸ்ரீ கிருஷ்ணா கோவிந்த ஹரே முராரி ஹே நாத் நாராயண வாசுதேவா..!!
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே..!!
இந்த நல்ல நாளில் கிருஷ்ணரைக் கொண்டாடுவோம்.
கண்ண பரமாத்மாவை உங்களின் பக்தி எனும் கயிற்றால் கட்டிப் போடுங்கள். குளிர்ந்த கண்ணன், நமக்கு அவனின் அருள் மழையைப் பொழிவான்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“