/indian-express-tamil/media/media_files/2025/08/15/pixabay-1-2025-08-15-19-49-24.jpg)
கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருக்கும்போது ரத்த சர்க்கரை அளவை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது? ` Photograph: (Image Source: Pixabay)
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையில், விரதம் இருக்கும் நீரிழிவு நோயாளிகள் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். விரதத்தின்போது சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல் இருக்க, எளிதான உணவு குறிப்புகள், நீர்ச்சத்துக்கான ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பான மாற்று உணவுகள் குறித்து மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர்.
கிருஷ்ண ஜெயந்தி விரதத்தின்போது ரத்த சர்க்கரை அளவை எப்படி கட்டுக்குள் வைப்பது?
ஆகஸ்ட் 16-ம் தேதி கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளையும், கோயில்களையும் மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரித்து, பக்திப் பாடல்களுடன் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர். விழாவோடு சேர்த்து, பலருக்கு விரதம் இருப்பதும் இந்த நாளின் ஒரு முக்கிய அங்கமாகும். சிலர் 'நிர்ஜல் விரதம்' (தண்ணீர் இல்லாமல்) இருக்கிறார்கள், மற்றவர்கள் விரதத்திற்கு அனுமதிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை மட்டும் அருந்துகின்றனர்.
ஆனால், நீரிழிவு நோய், ப்ரீ-டயாபடீஸ் அல்லது நிலையற்ற ரத்த சர்க்கரை அளவு கொண்டவர்களுக்கு விரதம் ஆபத்தானது. நீண்ட நேரம் உணவு இல்லாமல் இருப்பது, அதன்பிறகு பாரம்பரியமான அதிக சர்க்கரை கொண்ட பிரசாதங்களான வெண்ணெய், பேடா, அல்லது சர்க்கரை சேர்த்த பால் போன்றவை ரத்த சர்க்கரை அளவில் திடீர் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தலாம். இது தலைசுற்றல், சோர்வு அல்லது தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, கிருஷ்ண ஜெயந்தி விரதத்தின்போது உங்கள் ரத்த சர்க்கரை அளவை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது? இது குறித்து மருத்துவர்களிடம் நாங்கள் கேட்டறிந்தோம்.
மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, வைஷாலியின் மூத்த இயக்குனர் மற்றும் உள் நோயாளிகள் பிரிவு தலைவர் டாக்டர் அஜய் குமார் குப்தா கூறுகையில், முதல் படி விரதத்திற்கு முந்தைய உணவில் கவனம் செலுத்துவதே. “இது சரிவிகித உணவாக இருக்க வேண்டும், மெதுவாக ஆற்றலை வெளியிடும் ஓட்ஸ், பழுப்பு அரிசி, முழு தானிய சப்பாத்தி அல்லது பாஸ்தா போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளையும், பன்னீர், தயிர் அல்லது பருப்பு வகைகளான புரதச்சத்தையும், கொட்டைகள் அல்லது விதைகளான ஆரோக்கியமான கொழுப்புகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
நீரேற்றத்துடன் இருப்பதையும் மறக்காதீர்கள்
விரதத்தின்போது தண்ணீர் உங்கள் சிறந்த நண்பன். விரதத்திற்கு முன்னரும், விரதத்தின் போதும் (உங்கள் விரத முறை அனுமதித்தால்) போதுமான திரவங்களை அருந்த வேண்டும் என்று டாக்டர் குப்தா கூறினார். “எலெக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க இளநீர், சர்க்கரை இல்லாத எலுமிச்சை நீர் அல்லது மோர் ஆகியவற்றைத் தேர்வு செய்யுங்கள்” என்கிறார். நீங்கள் தண்ணீர்கூட குடிக்கக் கூடாது என்று விரதம் இருந்தால், முதல் நாள் இரவில் நன்கு நீர் அருந்த வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி பிரசாதங்கள் சுவையானவை, ஆனால் பெரும்பாலும் சர்க்கரை அதிகம் கொண்டவை. வெண்ணெய் அல்லது பேடா போன்றவற்றைச் சிறிய அளவில் சாப்பிடுவது தவறில்லை என்றாலும், சர்க்கரை அதிகரிப்பைக் குறைக்க, கொட்டைகள் அல்லது பன்னீர் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளுடன் அவற்றைச் சேர்த்து சாப்பிடலாம் என்று டாக்டர் குப்தா பரிந்துரைக்கிறார்.
விரதத்தை முடிக்கும்போது, உடனடியாக அதிகப்படியான, எண்ணெய் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, சில துண்டு பழங்கள், ஒரு கைப்பிடி கொட்டைகள் அல்லது பன்னீர் போன்ற இலகுவான உணவுகளுடன் தொடங்கி, 30-45 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் பிரதான உணவைச் சாப்பிடலாம்.
குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட விரத உணவுகளைத் தேர்ந்தெடுங்கள்
உங்கள் விரதத்தின்போது சாப்பிட அனுமதிக்கப்பட்டால், சாமாக் அரிசி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு அல்லது குட்டூ ரொட்டி போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீடு (low-GI) கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். இது இரத்த சர்க்கரையில் திடீர் அதிகரிப்பைத் தடுத்து, நிலையான ஆற்றலை அளிக்கும்.
நாள் முழுவதும் உங்கள் சர்க்கரை அளவைக் கண்காணித்து வாருங்கள்
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், நாள் முழுவதும் உங்கள் சர்க்கரை அளவைக் கவனமாகக் கண்காணிக்கவும். “வியர்வை, குழப்பம், படபடப்பு அல்லது அதிக பலவீனம் போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் உடனடியாக உங்கள் விரதத்தை நிறுத்துங்கள்” என்று டாக்டர் குப்தா எச்சரிக்கிறார்.
சமச்சீர் விரதத்திற்கான நிபுணர்களின் குறிப்புகள்
இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சப்தர்ஷி பட்டாச்சார்யா கூறுகையில், கிருஷ்ண ஜெயந்தி அல்லது இடைப்பட்ட விரதம் என எதுவாக இருந்தாலும், பாதுகாப்பான விரதத்திற்கு திட்டமிடலும், அளவுக் கட்டுப்பாடும் அவசியம்.
விரதத்திற்கு முன் ஒரு சமச்சீர் உணவைச் சாப்பிடுங்கள்
உங்கள் ஆற்றல் சீராக இருக்க, உங்கள் உணவில் மூன்று மேக்ரோநியூட்ரியண்டுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளுக்கு, முழு கோதுமை ரொட்டி, பழுப்பு அரிசி, கம்பு, சோளம், ராகி அல்லது ஓட்ஸ் ஆகியவற்றைத் தேர்வு செய்யுங்கள். பருப்பு வகைகள், கடலை, ராஜ்மா, பன்னீர், முட்டை அல்லது மீன் போன்றவற்றிலிருந்து புரதத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். கொட்டைகள், விதைகள், நெய் அல்லது தேங்காய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளைச் சாப்பிடுங்கள். இரண்டு ரொட்டி, பருப்பு, காய்கறி, தயிர் மற்றும் ஒரு கைப்பிடி பாதாம் போன்றவை சமச்சீரான உணவாக இருக்கும் என்று டாக்டர் பட்டாச்சார்யா பரிந்துரைக்கிறார்.
விரதத்திற்கு முன் பதப்படுத்தப்பட்ட மற்றும் இனிப்பு உணவுகளைத் தவிர்க்கவும்
வெள்ளை ரொட்டி, மைதா பரோட்டா, வறுத்த தின்பண்டங்கள் மற்றும் இனிப்புகள் ஆகியவை இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கச் செய்து, பின்னர் குறைக்கும். எனவே, நார்ச்சத்து நிறைந்த, மெதுவாகச் செரிக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் பட்டாச்சார்யா அறிவுறுத்துகிறார்.
விரதத்தை படிப்படியாக முறியுங்கள்
1-2 பேரீச்சம்பழங்கள், கொய்யா, பப்பாளி அல்லது மோர் போன்ற ஏதாவது இலகுவான உணவோடு விரதத்தை முறியுங்கள். உங்கள் முக்கிய உணவைச் சாப்பிடுவதற்கு முன் 15-20 நிமிடங்கள் காத்திருங்கள்.
உங்கள் தட்டில் காய்கறிகளை நிரப்புங்கள்
சுரைக்காய், வெண்டைக்காய், கீரை, பாகற்காய், கேரட் போன்ற காய்கறிகள் சர்க்கரையின் உறிஞ்சுதலை தாமதப்படுத்த உதவுகின்றன. அவற்றை கறி, சூப் அல்லது வறுத்த உணவுகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்
விரதத்திற்குப் பிறகு அதிகப்படியான உணவுகள் இரத்த சர்க்கரையைத் திடீரென அதிகரிக்கச் செய்யலாம். மெதுவாகச் சாப்பிடுங்கள், நன்றாக மென்று, அளவோடு சாப்பிடுங்கள்.
அமெரிக்க நீரிழிவு சங்கத்தின்படி, நன்கு தயாராகி, தங்கள் உணவைச் சரிசெய்தால், நிலையான இரத்த சர்க்கரை அளவு கொண்ட பலருக்கு விரதம் பாதுகாப்பானது. இருப்பினும், டைப் 1 நீரிழிவு நோய், கட்டுப்படுத்த முடியாத டைப் 2 நீரிழிவு நோய் அல்லது பிற தீவிர உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் விரதம் இருப்பதற்கு முன் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.