Tamil Serial News: வில்லத்தனத்தில் மட்டுமல்லாமல் குணச்சித்திரத்திலும் கலக்கலாக நடிக்கக் கூடியவர் கிருத்திகா அண்ணாமலை. சன் டிவி-யில் ஒளிபரப்பான, ‘மெட்டி ஒலி’ சீரியலில் அறிமுகமான அவர், பல்வேறு சீரியல்களில் வில்லியாகவும், குணச்சித்திர வேடத்திலும் கலக்கினார். என்ன வேடம் கொடுத்தாலும் பிரமாதமாக நடிப்பவர் என்ற பெயர் கிருத்திகாவுக்கு உண்டு.
’ஆடுகிறான் கண்ணன்’, ’முந்தானை முடிச்சு’, ’கணவருக்காக’, ’வம்சம்’, ’செல்லமே’, ‘கண்மணி’, ‘சின்னத்தம்பி’ என்று கிருத்திகா நடித்த சீரியலின் பெயர்கள் நீண்டுக் கொண்டே போகிறது. நிறைய வில்லத் தனங்களுக்கு இடையே ரம்யா கிருஷ்ணனுடனான வம்சம் சீரியலில் பாஸிட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்தார். தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டவர் இல்லம்’ சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
பருமனாக இருந்த கிருத்திகா, கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். 2013-ல் 83 கிலோவாக இருந்த இவர், தற்போது 60 கிலோவாக குறைந்திருக்கிறார். சீரியல் நடிகை என்பதைத் தாண்டி, கிருத்திகா நல்ல டான்ஸரும் கூட. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். நல்ல உயரத்துடன், கம்பீரமாக இருப்பதால், இவருக்கு வில்லி கதாபாத்திரமாகவே அமைகிறதாம்.
கேர்ள்ஸ் ஸ்கூல், வுமென்ஸ் காலேஜ் என்று படித்துவிட்டு, நடிக்க வந்த கிருத்திகாவுக்கு அப்போது ஆண்களின் பரிச்சயம் அவ்வளவாக இல்லையாம். இதனாலேயே நடிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் ஷூட்டிங்கில் ஆண்களிடம் பழக ஆரம்பித்ததில் தான் அவர்களைப் பற்றி தெரிந்துக் கொண்டாராம். சன் டிவியில் இப்போது ஒளிபரப்பாகி வரும் ’பாண்டவர் இல்லம்’ என்கிற சீரியலில் ஆண்கள் மட்டுமே இருக்கும் குடும்பத்தில் பெண்கள் ஒவ்வொருவராக எப்படி நுழைகிறார்கள் என்பதுதான் கதை. அதில் ரேவதி என்கிற மருமகள் கேரக்டரில் நடித்து வருகிறார் கிருத்திகா.
கிருத்திகாவின் கணவர் அருண் சாய். இந்த தம்பதியருக்கு ஆறு வயதில் மகன் இருக்கிறான். சேலையை விரும்பி அணியும் கிருத்திகா, படபிடிப்பு இல்லாத நாட்களில் வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். பண்டிகைகளிலேயே தீபாவளி இவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாம். புத்தாடை, பலகாரம், பட்டாசு என குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பாராம். அதோடு தீபாவளி படங்களை மிஸ் பண்ணாமல் பார்ப்பாராம். இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷல் எபிசோடான, ‘பாண்டவர் இல்லம், நிலா’ மகா சங்கமத்தில், அவர் உடுத்தியிருக்கும் சேலை 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்ததாம். அவர் பருமனாக இருக்கும் போது அந்த சேலையில் எடுத்த படத்தையும் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் கிருத்திகா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.