கட்டுரையாளர்: க.கலாதரன், அதங்கோடு
தொழிலதிபர்களுக்கென ஒரு ஒழுங்கை, இலக்கணத்தை, இலட்சணத்தை இந்த வர்த்தக உலகம் கட்டமைத்திருக்கிறது. அதிலிருந்து முற்றிலும் விட்டு விலகி தனக்கென எந்த தலைக்கன கிரீடமும் அணிந்து கொள்ளாமல் இயல்பாக திரிகிற தொழிலதிபர் 'போச்சே ' என செல்லப்பெயரிட்டு கொண்டாடப்படும் போபி செம்மனூர்.
தங்க வைர வர்த்தகம் இவரது தொழிலடையாளம் என்றாலும் இரத்த தானத்தை வலியுறுத்தி கேரளா முழுக்க ஓடுகிறார். விளையாட்டை ஊக்குவிக்கிறார். ஆதரவின்றி நிற்பவர்களுக்கு அபயகரம் நீட்டுகிறார். இயற்கை பேரிடரென்றால் மீட்பு வாகனங்களோடு வருகிறார். நிரபராதி எவரேனும் அரபுச்சிறையில் அகப்பட்டால் அவர்களை மீட்க உண்டியலும் தூக்குகிறார்.
'போச்சே டோடி பப்' என்கிற பெயரில் கள்ளுக்கடைகளைத் திறந்து அடித்து ஆடும் இவர் தனது நகைக்கடை திறப்பு விழாக்களுக்கு மட்டும் நடிகைகளை அழைத்து வருகிறார்.
அப்படி இவரது அழைப்பின் பேரில் வந்தவர்தான் ஹனிரோஸ். ஒரு சந்தர்ப்பத்தில் இவர் பேசிய பேச்சின் அர்த்தம் வேறுவிதமாக புரிந்து கொள்ளப்பட்டதில் சிறைமீண்டு வரவேண்டியதாகிவிட்டது.
இந்த சூழ்நிலையில் இவரது புதிய நகைக்கடை ஒன்றை திறந்து வைக்க பிரபலமான பெண் தேவைப்படுகிறார். சோசியல் மீடியாவில் ஹனிரோசுக்கு இணையாக ரசிகர்களை வைத்திருக்கும் அன்னாரஜன் வகையறாக்களை கொண்டு வந்தால் கூட்டம் கூடும். கூடவே பிரச்னையும் வரும் என அனுமானித்திருக்கலாம், அல்லது வைரங்களால் ஜொலிக்கிற பெண்களை விட பாசிமணியால் பளபளப்பான பெண் பரவாயில்லை என யோசித்திருக்கலாம்.
அப்படித்தான் கும்பமேளா கூட்டத்தில் காமிராக்கண் கண்டுபிடித்த மோனலிசா என்கிற பெண் திறப்பு விழாவுக்கு அழைத்து வரப்படுகிறார். நேர்த்தியான அழகிகளால் நிரம்பி வழியும் கேரளா மோனலிசாவைக் காண நெருக்கியடிக்கிறது. ஐபோன்களொடு திரியும் ஆடம்பர கூட்டம் மோனலிசாவோடு செல்பி கேட்டு கெஞ்சுகிறது.
கும்பமேளா கூட்டத்தைப் பார்த்து இயல்பாக இருந்த மோனலிசா ரசிகர்களை பார்த்ததும் உற்சாகமாகிறார். ஒரு கட்டத்தில் அவர்களோடு கைகுலுக்க நெருங்கிய போது அவரது தாயார் தடுக்கிற அளவுக்கு போகிறது கதை.
"திடீர் தலைவராவது போலத்தான் திடீர் நட்சித்திரம் ஆவதும்." தலைகால் புரியாது. கூடவே தலைக்கனமும் ஏறிவிடும். இந்த நிலையில்தான், மலையாள சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக மோனலிசா அறிவித்திருக்கிறார்.
உலக சினிமாவுக்கு தலைமையேற்கிற தகுதி மலையாள சினிமாவுக்கு உண்டு. அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுப்பது கேரள லாட்டரிதான்; கேரள சினிமா அல்ல...! என்பதை எப்படி இவருக்கு புரிய வைப்பது?
தமிழ்நாட்டு அரசியலில் டப்பிங் வாய்ஸ் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. உண்மையில்... டப்பிங்வாய்ஸ் என்பது மோனலிசா பேசியிருப்பதுதான்.