/indian-express-tamil/media/media_files/2025/08/23/latha-rajinikanth-2025-08-23-11-42-26.jpg)
Latha Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்றே சொல்லலாம். 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று திருப்பதியில் ரஜினிகாந்த், லதாவை திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் ஒரு நேர்காணலில் தொடங்கியது. சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்த லதா, கல்லூரிப் பத்திரிகைக்காக ரஜினிகாந்தை பேட்டி எடுக்கச் சென்றார்.
ரஜினிகாந்தின் 'தில்லு முல்லு' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. லதா, தனது கல்லூரி இதழுக்காக ரஜினியைச் சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அவர்களுக்குள் ஒரு இணக்கம் ஏற்பட்டது. பேட்டி கேள்விகள் குறைந்து, இயல்பான உரையாடல்கள் நிறைந்திருந்தன. பேட்டியின் போது ரஜினியும், லதாவும் பரஸ்பரம் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இது அவர்களின் உரையாடலை மேலும் சுவாரஸ்யமாக்கியது.
பேட்டியின் முடிவில், திருமணம் குறித்து லதா ரஜினிகாந்திடம் ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ரஜினி, "உங்களைப் போன்ற ஒரு பெண் கிடைத்தால், நான் திருமணம் செய்துகொள்வேன்" என்று கூறினார். இந்த எதிர்பாராத பதில், லதாவை வெட்கத்தில் ஆழ்த்தியது. அதன் பின், லதாவின் அண்ணன் மைத்துனர் மற்றும் நடிகரான ஒய்.ஜி. மகேந்திரன் உதவியுடன் ரஜினிகாந்த் லதாவின் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்று திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ரஜினியின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைப் பற்றி, ஒய்.ஜி. மதுவந்தியின் தாயார் சுதா சமீபத்தில் மிஸ் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
”சவுக்கார் அம்மா வீட்டுல ஷூட்டிங் நடந்துட்டு இருந்தது. லதா ஒரு இண்டர்வியூ எடுக்கிறதுக்காக போனா. அதுவரைக்கும் லதா, சந்நியாசி ஆயிடுவான்னு தான் நாங்கெல்லாம் நினைச்சுட்டு இருந்தோம். குடும்ப வாழ்க்கை மேல பெருசா அவளுக்கு விருப்பம் இல்ல. அப்படி இருந்த ஒருத்தி, திடீர்னு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்னு சொன்னா, எப்படி இருக்கும்? எங்களுக்கு அதிர்ச்சி! அவ ஒரு 'ஹேப்பி-கோ-லக்கி' டைப் இல்லை. ரொம்ப அமைதியானவ, தத்துவங்கள் பேசுவா, ஆன்மீக விஷயங்கள்ல ரொம்ப ஈடுபாடு கொண்டவ.
அப்படிப்பட்ட லதா, ரஜினிகாந்தை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு சொன்னபோது, முதல்ல எங்களுக்குள்ள ஒரு பயம் வந்துச்சு.
ஆனா, அவ சொன்னதுல இருந்த தீவிரத்தைப் பார்த்ததும், நாங்க மகேந்திராகிட்ட பேசிப் பார்த்தோம். அவ சொன்னது உண்மை, அவள் கல்யாணத்தில் ரொம்ப உறுதியா இருக்கான்னு புரிஞ்சுக்கிட்டோம். அதுக்கும் மேல ரஜினியும் இதுல உறுதியா இருந்தாரு.
ஆனா இன்னைக்கு யோசிச்சு பார்த்தா... ரஜினிகாந்த் வாழ்க்கையில ஒரு பெரிய திருப்புமுனையே இந்த கல்யாணம்தான். அவரே பல மேடைகள்ல இதை சொல்லி இருக்கார். லதா, ரஜினிகாந்த்தோட வாழ்க்கையில வந்ததுக்கு அப்புறம்தான் அவரோட வாழ்க்கை இன்னும் அழகா, அமைதியா மாறிச்சு. அதுக்கு முக்கியமான காரணம் நானும், என் கணவரும் தான்”, என்று சுதா அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.