பார்ட்டி உட்பட கேளிக்கைகளுக்கு பிரசித்தி பெற்ற ‘ஸ்தலம்’ ‘கோவா கடற்கரை’. ட்ரிப் என்றதுமே இளசுகளின் மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஸ்பாட் தான். கணக்கில்லாத மது, விதவிதமான உணவுகள், பீச் வாக், சன் ரைஸ் என கோவாவின் கொடையை அனுபவிக்க படையெடுப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறார்கள்.
இந்நிலையில் கோவாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் பொது இடங்களில் மது அருந்தியும், உணவு சமைத்தும் அசுத்தம் செய்து வருவதாகவும், மது பாட்டில்களை சாலைகளில் உடைப்பதாகவும் புகார்களும் அதிகமாகின.
இதைத் தடுக்கும் வகையில் சுற்றுலாத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பதாகவும், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும், கோவா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் அஜ்கான்கர் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த வியாழனன்று இந்த மசோதா கோவா சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2001-ன் படி இனி கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பீச் உள்ளிட்ட பொதுவிடங்களில் மது அருந்தினாலோ, உணவு சமைத்தாலோ அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. தனி நபராக இருந்தால் ரூ.2000, குழுவாக இருந்தால் ரூ.10000, அபராதம் கட்டத் தவறினால் 3 மாத சிறை என தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர், “இனிமேல் எங்கள் கடற்கரையில் யாராலும் மது அருந்த முடியாது. பாட்டில்கள் எடுத்துச் செல்ல முடியாது. திறந்த வெளியில் உணவும் சமைக்க முடியாது” என்றார்.
இதனால் கோவாவின் மது விற்பனையாளர்களும், சுற்றுலா பயணிகளும் கலக்கத்தில் உள்ளனர்.