Advertisment

பொழுதுபோக்கை உலக சாதனையாக்கிய மதிமயக்கும் பெருமாள்

மதிமயக்கும் பெருமாளுக்கு புகைப்படம் அனுப்பித் தந்தவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிடத் தக்கவர்கள் தான். என்றாலும் நெல்சன் மண்டேலா, பிரிட்டீஷ் இளவரசி டயான, கம்ப்யூட்டர் நாயகன் பில்கேட்ஸ், போப் ஜான்பால், தலாய் லாமா, மைக்கேல் ஜாக்சன்’ இப்படி மூச்சுவிடாமல் அடிக்கிக் கொண்டே போகலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
leaders signed photos, celebrities signed photos, தலைவர்கள் கையெழுத்திட்ட புகைப்படங்கள், celebrities signed collector, limca record holder mathimayakkm perumal, leaders signed photos, tamil nadu, limca record list

leaders signed photos, celebrities signed photos, தலைவர்கள் கையெழுத்திட்ட புகைப்படங்கள், celebrities signed collector, limca record holder mathimayakkm perumal, leaders signed photos, tamil nadu, limca record list

முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்

Advertisment

அன்று காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு, தனக்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்த கடிதங்களைப் பிரித்துப் படிப்பதில் மும்முரமாக இருந்தார் அந்தப் பெரியவர்.

அவர் கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில், உள்ளூர் போலீஸ் அதிகாரியுடன் மூன்று நான்கு இராணுவ அதிகாரிகள் துமு... துமு... என அந்தப் பெரியவரின் வீட்டிற்குள் புகுந்து, ‘இந்திய இராணுவ தலைமைத் தளபதிக்குக் கடிதம் எழுதும் அளவிற்கு நீ என்ன பெரிய ஆளா இல்ல தீவிரவாதியா? எதற்காக அவருக்குக் கடிதம் எழுதினாய்? இது மாதிரி வேறு யாருக்கெல்லாம் கடிதம் எழுதியிருக்கே? எல்லாத்தையும் காட்டு. இல்ல.. இப்ப என்ன நடக்குமெண்ணுத் தெரியாது’ எனக் கொந்தளிக்க...

அந்தப் பெரியவர் ஒன்றும் புரியாமல் திகைத்துப்போய் நிற்க, அப்பொழுது கூடவந்த உள்ளூர் போலீஸ் அதிகாரி கொஞ்சம் நிதானமாக ‘நீங்க இந்திய இராணுவத் தலைமைத் தளபதி என்.சி.விஜூ அவர்களுக்கு, அவரின் கொயெழுத்துப் போட்ட போட்டோ அனுப்பி வைப்பதற்காக லெட்டர் எழுதியிருக்கீங்க, அது எதற்காக என விசாரிப்பதற்காகத் தான் இவர்கள் வந்துள்ளார்கள்’ எனக் கூறியுள்ளார். அதன் பிறகுதான், அந்தப் பெரியவர் கொஞ்சம் நிதானமாகி ஓகோ... இதுதான் விஷயமா எனக் கேட்டுக்கொண்டு வந்தவர்களை விருந்தாளிகள் போல் உபசரிப்பதற்குத் தொடங்கியுள்ளார் அந்தப் பெரியவர்.

என்ன இது திகில் கதையாக இருக்கிறது விஷயத்துக்கு வாருங்கள் என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. இனி விஷயத்திற்குள் வருகிறேன். பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை யாரைப் பார்த்தாலும் சாதாரணமாக எல்லோரும் கேட்கும் ஒரு கேள்வி பொழுதுபோக்குக்காக என்ன செய்கிறீங்க? என்பதுதான். அதற்குக் கிடைக்கும் பதில் சினிமா பார்ப்பது... பாட்டுக் கேட்பது... பேஸ்புக், வாட்ஸ்அப் நோண்டுவது... இப்படித்தான் பெரும்பாலானவர்களிடத்திலிருந்து பதில் வரும்.

இதையும் தாண்டி எங்கோ ஒருசிலரிடமிருந்துதான் தபால்தலைச் சேகரிப்பது, பழங்கால நாணயங்கள் சேகரிப்பது, புத்தகம் படிப்பது இதுபோன்றப் பதில்கள் வரும். ஆனால், இதையெல்லாம் தாண்டி ஒருவர், நான் உலகத் தலைவர்களின் புகைப்படத்தை, அவர்களின் கையெழுத்தோடு வாங்கிச் சேகரிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளேன் எனக் கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அப்படியும் ஒருவர் நம் நாட்டில் இருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சார்ந்தவர் மதிமயக்கும் பெருமாள். தற்போது மார்தாண்டம் அருகே திருவட்டாரில் வசித்து வருகிறார். ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்த இவர், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கர்மவீரர் காமராஜரிடமிருந்து, அவரின் கையெழுத்திட்டப் புகைப்படத்தை அனுப்பி வைப்பதற்குக் கடிதம் எழுதியுள்ளார். கடிதம் எழுதி சரியாக 15 நாளில் அவரிடமிருந்து, கையெழுத்திட்டப் புகைப்படம் வந்து சேர்ந்துள்ளது.

அதிலிருந்து தொடங்கிய இந்த கையெழுத்திட்டப் புகைப்படம் சேகரிக்கும் பழக்கம், பிறகு மாநிலம் தாண்டி, நாடாகி இன்று உலக நாடாகியுள்ளது. இன்று உலக அளவில் அரசியல், ஆன்மீகம், அறிவியல் கலை, இலக்கியம், விளையாட்டு, சினிமா, வணிகம், பொருளாதாரம், விண்வெளி, ஆட்சி, அதிகாரிகள் எனப் பல்துறை சார்ந்த சுமார் நாலாயிரம் பிரபலங்களிடம், அவர்களின் கையெழுத்திட்ட புகைப்படங்களைச் சேகரித்து, அதன் மூலம் லிம்கா சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்து, அடுத்து உலகச் சாதனையாளர் புத்தகமான கின்னஸில் இடம் பிடிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் இந்த மதிமயக்கும் பெருமாள் அவர்கள்.

‘உங்களுக்கு எப்படி இப்படியொரு வித்யாசமான ஐடியா வந்தது?’ எனக் கேட்டதற்கு அவர், நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடன் படித்த ஒரு மாணவன் தபால்தலைச் சேகரிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தான். அவன் கொண்டு வரும் தபால்தலைகளைப் பார்த்து விட்டு ஆசிரியர்கள் அவனைப் பயங்கரமாகப் பாராட்டுவார்கள். அதைப் பார்க்கும் போது எனக்குள்ளேயும் இது போன்று ஏதேனும் வித்யாசமாகச் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியது. அப்படித் தொடங்கியதுதான் இந்தப் பழக்கம்” எனக் கூறினார்.

’எப்படி லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ”நான் இதுவரை சுமார் நான்காயிரம் உலகப் பல்துறைப் பிரபலங்களிடமிருந்து, அவர்களின் கையெழுத்திட்டப் புகைப்படங்களைச் சேகரித்துள்ளேன். அவை அனைத்தும் தபால் மூலமாகவே சேகரித்துள்ளேன். அதற்காகத்தான் எனக்கு லிம்கா விருது தந்துள்ளார்கள்’ என மகிழ்ச்சியோடு பதிலளித்தார்.

இதுவரை நீங்கள் கையெழுத்திட்ட புகைப்படம் சேகரித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யாரெல்லாம்?’ என்றதற்கு ‘எனக்குப் புகைப்படம் அனுப்பித் தந்தவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிடத் தக்கவர்கள் தான். என்றாலும் நெல்சன் மண்டேலா, பிரிட்டீஷ் இளவரசி டயான, கம்ப்யூட்டர் நாயகன் பில்கேட்ஸ், போப் ஜான்பால், தலாய் லாமா, மைக்கேல் ஜாக்சன்’ இப்படி மூச்சுவிடாமல் அடிக்கிக் கொண்டே போனார். அதை கேட்கும் போது நமக்கே போதும் போதும் என்றாகி விட்டது.

‘இதன் மூலம், உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் உண்டா?’ எனக் கேட்டதற்கு, ”இந்திய இராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த என்.சி.விஜூ அவர்களுக்கு எல்லோருக்கும் கடிதம் எழுதுவது போல் புகைப்படம் கேட்டு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தேன். கடிதம் எழுதியச் சில நாள்கள் கழிந்து, போட்டோவிற்குப் பதில் ஒரு நாள் போலீஸ் அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் என்னை ஒரு தீவிரவாதி எனக்கருதி, எனது வீட்டிற்கு விசாரணைக்காக வந்தார்கள். வந்த வேகத்தில் அவர்கள் ஒரு தீவிரவாதியிடம் எப்படி விசாரணை நடத்துவார்களோ அதுபோல் மிகவும் கடுமையாக விசாரித்தார்கள். அதன் பிறகு உண்மையை அறிந்து, விசாரணைக்காக வந்தவர்கள் என்னை மிகவும் பாராட்டி நல்ல நண்பர்களாகி விட்டார்கள். அது எனக்குக் கிடைத்த வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாகும்” என தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘லிம்கா சாதனையைப் போன்று வேறு ஏதேனும் சாதனைக்குத் தயாராகிறீர்களா?’ எனக் கேட்டதற்கு, ”அடுத்து உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் சாதனைக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு இன்னும் ஐநூறு பிரபலங்களின் கையெழுத்துப் போட்டப் போட்டோ தேவைப்படுகிறது. அதையும் மிக விரைவில் பெற்றுவிடுவேன். அதன் பிறகு கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க வேண்டும்” என மிகவும் உற்சாகமாகக் கூறினார் மதிமயக்கும் பெருமாள் அவர்கள்.

இந்த வித்யாசமான பொழுதுபோக்கால் இன்று உலகச் சாதனைப் படைக்கக் காத்துக் கொண்டிருக்கும் இவரை நாமும் திறந்த மனதோடு பாராட்டுவோம்.

முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்

மின்னஞ்சல்: drkamalaru@gmail.com

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment