Lifestyle news in tamil: கிராமங்களில் இருந்து நகரத்தை நோக்கி பலர் புலம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் தங்கள் ஊரில் விளையும் காய்கறி மற்றும் பழ வகைகளை உண்டு பழகி இருப்பர். நகரங்களில் நிலம் இல்லதவர்கள் தங்களுடைய வீட்டின் மாடிகளில் தோட்டம் அமைத்து சத்தான காய்கறிகளை உற்பத்தி செய்து வருகின்றனர். எனவே அரசு தானாகவே முன் வந்து இதற்கு தேவையான விதைகள் மற்றும் குரோபேக் பைகளை மானிய விலையில் கொடுத்து மொட்டை மாடி தோட்டத்தை ஊக்குவிக்கிறது. இதை எல்லா மாவட்டங்களிலும் அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பாக மாடித்தோட்டம் அமைப்பதற்கான உபகரணங்களை மானிய விலையில் வழங்குவதோடு ஏற்கனேவே வீட்டுத்தோட்டம் அமைத்துள்ளவர்களுக்கு மானிய விலையில் சொட்டு நீர் குழாய் அமைப்புகளை வழங்கி வருகிறது.
தமிழக அரசு தரும் கிட்-டில் என்னென்ன உள்ளன?
இந்த கிட்-டில் 6 குரோபேக், அதில் 2 கிலோ எடையுள்ள காயர்பித் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
6 பாக்கெட் காய்கறி விதைகள்,
200 கிராம் அசோஸைபைரில்லம்,
200 கிராம் பாஸ்போ பாக்டீரியா,
200 பயோ கன்ட்ரோல் ஏஜென்ட்,
100 மில்லி அசாட்டிராக்டின் (Azadirachtin) அதாவது வேப்பெண்ணெய் மருந்து
இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற செயல் விளக்கக் கையேடு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அதிக விதைகளை கொண்ட இந்த பாக்கெட்டில் இருப்பது அனைத்தும் ஹைபிரிட் ரக விதைகள் தான். ரூ.850 விலையுள்ள இந்த கிட்டை ரூ.510 -ற்கு மானிய விலையில் அரசு வழங்குகிறது. மாடித்தோட்டத்திற்குச் சொட்டுநீர் அமைப்பதற்காக 1000 ரூபாயில், மானியமாக 380 ரூபாய் போக, 720 ரூபாய் கொடுத்தால் போதும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிட்டை வாங்கியவர்களுக்கு எப்படி மாடியில் தோட்டம் அமைப்பது என்ற சந்தேகம் வரலாம். எனவே தான் உங்களுக்காக மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய எளிய டிப்ஸ் இங்கு வழங்க்கப்பட்டுள்ளது.
நீங்கள் செய்ய வேண்டியது:
நீங்கள் தயார் செய்ய உள்ள மாடித்தோட்டத்தில் செடிகளை நடும் பொது போதுமான இடைவெளி விட்டு நாடா வேண்டும். அப்போது தான் செடிகள் நன்றாக வளரும். இல்லையென்றால் செடிகளின் வளர்ச்சியில் பாதிப்பு அதிகரிப்பதோடு மகசூலும் கடுமையாகப் பாதிக்கப்படும். குறைந்த பட்சம் ஒரு முலம் இடைவெளியாவது கடைபிடிக்க வேண்டும்.
செடிகளின் வேரில் நோய் பரவாமல் தடுப்பதற்காக, காய வைத்த வேப்ப இலைகளை பொடி போல ஆக்கி வேரின் அடியில் இடலாம். வேப்ப எண்ணெய் பயன்படுத்தினால் மிகவும் நல்லது.
மாடிகளில் நிறைய பேர் மலர்ச் செடிகளை வளர்க்கின்றனர். மல்லி, முல்லை போன்ற செடிகளை வீட்டின் முற்றங்களில் வளர்த்தால் வீடு அலங்கரிக்கப்பட்டது போல் இருக்கும். மாடியில் செடிகள் வளர்ப்பதற்கு அதிக இடமும் கிடைக்கும். அதோடு துளசி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, சோற்றுக்கற்றாழை, கற்பூரவள்ளி போன்ற மூலிகை குணமுடைய செடிகளையும் வளர்க்கலாம். இது நமக்கு அன்றாட உதவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil