பாப், ராக், ஹிப்-ஹாப், ஜாஸ் என எந்த வகை இசையாக இருந்தாலும், நம் மனதிற்கு அமைதியையோ அல்லது உற்சாகமான மனநிலையையோ கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. நமது மன ஆரோக்கியத்தில் இசை சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது பொதுவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் மன ஆரோக்கியத்தைத் தாண்டி, நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளிலும் ஆழமான தாக்கத்தை இசை ஏற்படுத்தும். ஆம், நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இசை சிகிச்சை உங்கள் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். ஆனால் சில மெல்லிசைகளைக் கேட்பது உங்கள் உடல்நலனை எப்படி பாதிக்கிறது?
இசையின் உடல்நலன் மீதான தாக்கம்
இசை நமது உடலின் நாளமில்லா அமைப்பை (endocrinesystem) கணிசமாகப் பாதிக்கிறது. இசையைக் கேட்பது, நாம் ரசிக்கும் இசையை கேட்பது, மூளையில் பல்வேறு ஹார்மோன்களை வெளியிடத் தூண்டும். மும்பை சர் ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பி நிபுணர் டாக்டர் சோனாலி சிவாஜி காக்னே, "உதாரணமாக, இன்பம் மற்றும் வெகுமதியுடன் தொடர்புடைய நரம்பியக்கடத்தியான டோபமைன் வெளியிடப்படுகிறது. இது மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கும். இசை மன அழுத்த ஹார்மோனைக் குறைக்கும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்" என்று indianexpress.com-மிடம் தெரிவித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இசை எண்டோர்பின்களை வெளியிடவும் தூண்டலாம், அவை இயற்கையான வலி நிவாரணிகளாகவும் மனநிலையை மேம்படுத்துபவையாக செயல்படுகின்றன. இசை சிகிச்சை ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, இதயத் துடிப்பு மாறுபாட்டை மேம்படுத்துவது மற்றும் ஒட்டுமொத்த உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்துவது போன்ற நன்மைகளை நிரூபித்துள்ளது. பல்வேறு மனநலப் பிரச்னைகள், புற்றுநோய் நோயாளிகளுக்கு தணிக்கும் சிகிச்சை மற்றும் வலி மேலாண்மைக்கான விருப்பமாகவும் ஆராயப்பட்டு வருகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு எவ்வளவு பயனுள்ளது?
இன்சுலின் சுரப்பு மற்றும் நீரிழிவு மேலாண்மையில் இசையின் பங்கு குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருவதாக காக்னே குறிப்பிட்டார். "குறிப்பிட்ட ஒலி அலைவரிசைகள் (50 ஹெர்ட்ஸ்) ஒலிகளுக்கு வெளிப்படும்போது இன்சுலினை வெளியிடும் செயற்கை 'வடிவமைக்கப்பட்ட செல்'லை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அவர்கள் இந்த செல்லை சில விலங்குகளின் வயிற்றில் வைத்து இன்சுலின் வெளியீட்டில் இசையின் விளைவை ஆராய்ந்தனர்."
டாக்டர் காக்னே மேலும் கூறுகையில், "சில ராக் பாடல்கள் 5 நிமிடங்களுக்குள் சுமார் 70% இன்சுலின் தூண்டுதலைத் தூண்டின, மேலும் 15 நிமிடங்களுக்குள் அனைத்துமே எலிகளின் உடலில் ஆரோக்கியமானவற்றின் இயற்கையான குளுக்கோஸ்-தூண்டப்பட்ட இன்சுலின் தூண்டுதலுக்கு இணையாக இருந்தது" என்றார்
நீரிழிவு நோயாளிகளுக்கு இசை சிகிச்சை சாத்தியமா?
இசை சிகிச்சை இன்சுலின் விஷயத்தில் சில நேர்மறையான விளைவுகளைக் காட்டினாலும், இந்த முடிவுகளை பெரிய மக்கள் தொகைக்கு இப்போதைய நிலையில் கொண்டு செல்வதில் வரம்புகள் உள்ளன. ஆனால் எதிர்கால ஆராய்ச்சியுடன், இசை சிகிச்சை நீரிழிவு கட்டுப்பாட்டு விதிமுறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாக மாறும் என்று நம்பப்படுகிறது.