சூலூர் அருகே உள்ள மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் சாலையோர பகுதிகளில் ஒரே நேரத்தில் 3200 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில் பொதுமக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று மரங்களை நடவு செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த மோப்பிரிபாளையம் பேரூராட்சியை பசுமையாக்கும் நோக்கில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் கைகோர்த்துள்ள பேரூராட்சி நிர்வாகம் பசுமை வனங்களை அமைத்து பராமரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பேரூராட்சிக்கு உட்பட்ட சாலையோர பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதி உதவியுடன் 3200 மரங்கள் ஒரே நேரத்தில் நடவு செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோருடன் வந்து கலந்து கொண்ட பள்ளிக் குழந்தைகள் ஆர்வத்துடன் மரங்களை நடவு செய்தனர்.
இதுகுறித்து மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் சசிகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேரூராட்சிக்கு உட்பட்ட 57 கிலோ மீட்டர் சாலைகளின் இரு மருங்கிலும் 3200 மரக்கன்றுகளை நடவு செய்கிறோம். இதற்காக லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் சி.எஸ்.ஆர் நிதி பெற்றுள்ளோம். பேரூராட்சி பகுதிகளை பசுமையாக்கும் நோக்கில் ஏற்கனவே 5 வனங்களை அமைத்து பராமரித்து வருகிறோம். தற்போது சாலையோரங்களில் மரம் நட்டு பராமரிப்பது மூலம் பசுமை நிறைந்த பேரூராட்சியாக மோப்பிரிபாளையம் பேரூராட்சி திகழும் என்று நம்பிக்கை உள்ளது.
சாலையோரங்களில் நடவு செய்யும் மரங்களை லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றி பராமரிக்க இருக்கிறோம். இந்த பணிகளை மேற்கொள்ள பேரூராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகள் பெரிதும் உதவி வருகின்றனர். குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நிகழ்ச்சிக்கு அழைக்கும் போது அவர்களையும் கட்டாயம் அழைத்து வர வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டோம். அதன்படி நிறைய குழந்தைகள் இந்த நிகழ்வில் பங்கேற்று மரங்களை நடவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே குழந்தைகளை இது போன்ற நிகழ்வுகளில் பங்கெடுக்க வைத்தால் மட்டுமே மரங்களை நட்டு பராமரிப்பதில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் என தெரிவித்தார்.
ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“