Expert's Health Care Tips Tamil News: கடந்த மார்ச் மாதத்திலிருந்து லாக்டவுனில் லாக்காகி இருப்பவர்களின் லைஃப்ஸ்டைல், பெரும்பாலானவர்களுக்கு மாறியிருக்கிறது. பள்ளி, கல்லூரி முதல் அலுவலகங்கள் வரை எல்லாவற்றிலும் கட்டுப்பாடுகள். வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் ஊழியர்களின் மனநிலை மிகவும் மோசமாகியுள்ளது. வீட்டில்தானே இருக்கப்போகிறோம் என்ற எண்ணம், பலரின் வாழ்க்கைமுறையை மொத்தமாக மாற்றிவிட்டது.
தாமதமாக எழுவது/உறங்குவது, நினைக்கும் நேரத்தில் சாப்பிடுவது, படுத்துக்கொண்டே அலுவலக வேலைகளைச் செய்வது, நடந்துகொண்டே மொபைலில் திரைப்படங்கள் பார்ப்பது என தலைகீழாக வாழப் பழகிக்கொண்டனர் நம் மக்கள். இது, நம் உடல் ஆரோக்கியத்தோடு மனநலனையும் கெடுக்கும் வாழ்க்கைமுறை. இந்நிலையில், உடல்நலம் மற்றும் மனநலம் காக்க, நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை நம்மோடு பகிர்ந்துகொண்டார் ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்.
"இப்போது மாறியிருக்கும் லைஃப்ஸ்டைல், நிச்சயம் இயல்பு நிலைக்கு மாறிவிடும். அதனால், பயப்படவேண்டிய அவசியமில்லை. சிறுவயதில் கோடை விடுமுறையின்போது மாறும் நம் வாழ்க்கைமுறை, மீண்டும் கட்டுக்குள் வருவதை போன்றுதான் இந்த நிலைமையும் மாறிவிடும். அவரவர்களின் பொறுப்புகளை உணர்ந்து, நம் உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது நம் அனைவரின் கடமையும்கூட.
இந்த லாக் டவுன் நாள்களில், சிலர் அதிகமாகச் சாப்பிட்டிருப்பார்கள். சிலருக்குச் சாப்பிடவே தோணாது. இந்த இரண்டு நிலையம் ஆபத்துதான். இதனால், உடல் எடை அளவுக்கு மீறி அதிகரிக்கவும், குறையவும் வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமின்றி, எந்நேரமும் சோர்வாக உணர்வார்கள். இந்த நிலைக்குப் பெயர், ‘ஹேங்ஓவர்’.
நிச்சயம் இந்த மனநிலையை மாற்றுவது அவசியம். தற்போது லாக்டவுனில் தளர்வுகள் இருப்பதால், பாதுகாப்புடன் காலை எழுந்து நடைப்பயிற்சி செய்யலாம். அலுவலகம் செல்லவேண்டும் என்கிற மனப்பான்மையை மனதினுள் விதைத்து, படிப்படியாக இதனைக் கடக்கலாம்.
காலை உணவைத் தவிர்த்து மதிய உணவை மட்டும் உட்கொள்வது, இரவு மிகவும் தாமதமாகச் சாப்பிடுவது போன்ற பழக்கம் அனைவரிடத்திலும் தற்போது உள்ளது. இது நிச்சயம் உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும். சரியான அளவில் உணவு மற்றும் உடற்பயிற்சி, இவ்விரண்டும்தான் இதற்கான தீர்வு. உடலுக்கு எந்தவித அசைவுகளுமில்லாமல், சாப்பிட்டுக்கொண்டே இருந்தால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற உடல்நலக் கோளாறு ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதனால், அவ்வப்போது எளிமையான உடற்பயிற்சியை வீட்டிலிருந்தபடியே செய்யவேண்டும்.
Lockdown lifestyle change expert advice health tips
சூரியன் உதிக்கும் நேரத்தில் கண் விழிப்பது நல்லது, முடியாதவர்கள் அதிகபட்சமாக 7 மணிக்குள் எழலாம். எழுந்த அரை மணி நேரம் கழித்துக் குறைந்த அளவிலான சர்க்கரை சேர்த்த சூடான பால், டீ அல்லது காபி குடிக்கலாம். 8.30-க்குள் காலை உணவை முடிப்பது சிறப்பு. அதிகபட்சம் 10 மணிக்குள்ளாவது முழுமையான காலை உணவை சாப்பிட்டிருக்க வேண்டும். மூன்று இட்லி, அவற்றோடு ஒரு கப் பழங்களைச் சாப்பிடலாம். சீரான உடல் எடை இருப்பவர்கள் அரை கப் அதிகமாக சாப்பிடலாம்.
மதியம் 1 மணியளவில் மதிய உணவை உட்கொள்வது சிறந்தது. உடல் எடை அதிகமுள்ளவர்கள் 1 கப் சாதமும், சீரான உடல் எடை உடையவர்கள் 1 1/2 முதல் 2 கப் சாதமும் சாப்பிடலாம். அரை கப் பருப்பு கட்டாயம் உணவில் இருக்கவேண்டும். அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள் 1/2 கப் இறைச்சி அல்லது மூட்டை சாப்பிடலாம். அதேபோல, சாதத்தின் அளவைவிட அதிகமான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
இரவு 9 மணிக்குள் இரவு உணவு சாப்பிட வேண்டும். தோசை, சப்பாத்தி, சாதம் என எந்தவகை உணவாகவும் இருக்கலாம். அவற்றோடு, பருப்பு, காய்கறிகள் மற்றும் மோர் இருப்பது நல்லது.
மன அமைதிக்காக அவ்வப்போது தியானம், யோகா போன்றவற்றைச் செய்யலாம். அடிப்படை ஒழுங்குகளை கடைப்பிடித்தாலே போதும், நம் வாழ்வில் எந்த பிரச்சினையும் இருக்காது" என்று கூறினார் தாரணி கிருஷ்ணன்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"