இந்திய ஜனநாயகத்தில் வாக்களிப்பது என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. 18 வயது பூர்த்தி அடைந்த, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம்.
முதல் முறை வாக்களிக்கும் போது, ஒரு வாக்களராக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில அடிப்படை அம்சங்கள் உள்ளன.
முதலில், வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். ECI இணையதளத்தில் அல்லது உள்ளூர் தேர்தல் பதிவு அதிகாரியிடம் இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
சில நிர்வாகக் குளறுபடியின் காரணமாக வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலில் இல்லாமல் போகலாம். அப்படி இருப்பின் நீங்கள் வாக்களிக்க முடியாது.
தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன் மாநகராட்சி, நகராட்சி சார்பில் ஊழியர்கள் வீடுவீடாக பூத் ஸ்லிப் வழங்குவார்கள். அதில் எந்த இடத்தில் வாக்குச்சாவடி உள்ளது, எந்தப் பள்ளி, வாக்குச் சாவடி எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.
வாக்களிக்க போகும் முன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்று மற்றும் பூத் ஸ்லிப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்களிடம் ஒருவேளை பூத் ஸ்லிப் இல்லை என்றால் தேர்தல் அலுவலர்களால் விநியோகிக்கப்படாத வாக்காளர் சீட்டுகள், தேர்தல் தினத்தில் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சீட்டுகளை வழங்குவதற்காக வாக்குச் சாவடியிலேயே உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கும். வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் அங்கே சென்று பெற்றுக்கொள்ளலாம்.
பூத் ஸ்லிப்பில் பாகம் எண் என்று இருக்கும். அதைப் பார்த்து அங்குள்ள அறைகளில் எதில் உங்கள் பாகம் எண் உள்ளது என்பதைத் தெரிந்து அங்குள்ள வரிசையில் நிற்க வேண்டும்.
வாக்குச்சாவடிக்குள் நீங்கள் நுழைந்ததும் முதலில் அலுவலரிடம் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையையோ, பூத் சிலிப்பையோ காண்பிக்க வேண்டும்.
இவை இல்லாதபட்சத்தில் தேர்தல் கமிஷன் அறிவித்த ஆவணங்களில் ஒன்றைக் காட்டலாம்.
அந்த அலுவலர் தன்னிடம் வைத்திருக்கும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்துவிட்டு சத்தமாக உங்கள் பெயர், வாக்காளர் எண்ணைப் படிப்பார். அதை அங்குள்ள அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் அவர்கள் வைத்துள்ள வாக்காளர் பட்டியலில் டிக் செய்து கொள்வார்கள்.
பின்னர் நம்மிடம் உள்ள அடையாள அட்டையை மற்றொரு அதிகாரி பரிசோதித்து பெயர், வாக்காளர் எண்ணை எழுதி கையெழுத்தை வாங்குவார். அதன்பின்னர் மற்றொரு அலுவலர் விரலில் மை வைத்து வாக்களிக்க அனுப்புவார்.
நீங்கள் வாக்களிக்க தனி இடத்தில் மேசைமீது வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருக்கும். அதில், வரிசையாக வேட்பாளரின் பெயர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்களோ, அந்த வேட்பாளரின் சின்னத்துக்கு நேராக உள்ள பட்டனை அழுத்த வேண்டும்.
உடனே அந்த வேட்பாளரின் பெயருக்கு அருகில் உள்ள சிவப்பு நிற விளக்கு எரியும். அப்போது ஒரு பீப் சத்தம் கேட்கும். அப்படிக் கேட்டால் நீங்கள் வாக்களித்ததாக அர்த்தம்.
பக்கத்தில் நீங்கள் எந்தச் சின்னத்திற்கு வாக்களித்தீர்கள் என்பதைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் நீங்கள் வாக்களித்த சின்னம் தெரியும். அதில் நீங்கள் வாக்களித்த சின்னம் இல்லாவிட்டால் நீங்கள் புகார் அளிக்கலாம். வாக்களித்த பிறகு, உங்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது அடையாள பிற ஆவணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதிசெய்யவும்.
முக்கியமாக உங்கள் வாக்கு தான் இந்த நாட்டையும், நம் எதிர்காலத்தையும் தீர்மானிக்க போகிறது என்பதை உணர்ந்து தெளிவான எண்ணத்துடன் உங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.