கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் சிவராத்திரி மற்றும் சர்வ அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
வெள்ளியங்கிரி மலையில் சுயம்பு லிங்க ஆலயம் அமைந்துள்ளது. இது சிவ பக்தர்களின் புனித தலமாகவும், ஆன்மிக சுற்றுலா தலமாகவும் கருதப்படுகிறது. சிவ பக்தர்கள் ஆண்டுதோறும் வெள்ளியங்கிரி ஆண்டவர் ஆலயத்தின் அடிவாரத்தில் தரிசிக்கும் நிலையில், பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை, மலை ஏறி சுயம்பு லிங்கத்தை தரிசிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, இந்த மாதத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சிவ பக்தர்கள், ஆண்டவர் சுயம்பு லிங்கத்தை தரிசிக்கின்றனர். குறிப்பாக, சிவராத்திரியை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மேலும், சர்வ அமாவாசையை முன்னிட்டும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக, மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் அனைவரும் சிவனை வழிபட்டுச் சென்றனர்.