புதுச்சேரியில், மாசி மகத்தை முன்னிட்டு வைத்திக்குப்பம் கடற்கரையில் 129-ஆம் ஆண்டு கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று (மார்ச் 14) நடைபெற்றது. இதில் செஞ்சி ரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், மைலம் முருகன் மற்றும் புதுச்சேரியிலிருந்து ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி, லாஸ்பேட்டை சிவசுப்பிரமணியர், கவுசிக பாலசுப்பிரமணியர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் வருகை தந்தனர்.
இதில், அலங்கரிக்கப்பட்ட சாமிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் புதுச்சேரி மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஓரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட சாமிகளை தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டதால் வைத்திக்குப்பம் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது.
மாசி மகம் திருவிழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்ததால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாசி மகத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
மேலும், நகை திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 20-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா, ட்ரோன் மற்றும் 3 உயர் போலீஸ் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன.