ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாக் கோலம்தான். சக்தியின் வடிவமாகத் திகழும் அம்மனுக்கு உகந்த இந்த மாதத்தில், மதுரையில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்புப் பூஜைகளும், ஆராதனைகளும் களைகட்டும். பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத் துறை மதுரையில் இருந்து சிறப்பு 'ஆடி மாத அம்மன் டூர்' பேக்கேஜ் (ADI MONTH AMMAN TOUR FROM MADURAI) ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஒருநாள் பயணத்தின் மூலம், மதுரையின் முக்கிய அம்மன் கோயில்களில் தரிசனம் செய்து, ஆடி மாதத்தின் ஆன்மீக அனுபவத்தைப் பெறலாம். மதுரையில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு எஃப்.என்.டியில் இருந்து காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த சுற்றுலா அன்று இரவு 7.45-க்கு நிறைவடையும்.
இந்த சுற்றுலா பயணத்தில் நீங்கள் மீனாட்சி அம்மன் கோவில், மதுரை மாரியம்மன் கோவில், வண்டியூர் காளி அம்மன் கோயில், மடப்புரம் வெட்டுடையார் காளியம்மன் கோயில், விட்டனேரி முத்துமாரியம்மன் கோவில், தாயமங்கலம் ராக்காயி அம்மன் கோவில், அழகர் கோயில் ஆகிய வழித்தடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த பயணத்தில் பக்தர்களுக்கு பேருந்து வசதி, சுற்றுலா வழிகாட்டி ஏற்பாடு செய்து தரப்படும். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் தமிழ்நாடு எஃப்.என்.டியில்(Hotel Tamilnadu-Fnd) தொடங்கும் சுற்றுலா, அங்கேயே நிறைவடையும்.
வயதானவர்கள் ஆதார் கார்ட்/ஓட்டுநர் உரிமம்/வாக்காளர் அட்டை/பாஸ்போர்ட் ஆகிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். சிறுவர்களுக்கு ஆதார் அட்டை/பள்ளி அடையாள அட்டை, குழந்தைகளுக்கு ஆதார் அட்டை/பிறப்பு சான்றிதழ் ஆகியவை தேவைப்படும். இந்த ஒருநாள் சுற்றுலா திட்டத்திற்கு ரூ.1400 வசூலிக்கப்படுகிறது. உணவு மற்றும் இன்ன பிற செலவுகள் அனைத்தும் பயணிகளின் பொறுப்புதான். மேலும் விபரங்களுக்கு: https://ttdconline.com/tour/details/ADI%20MONTH%20AMMAN%20TOUR%20FROM%20MADURAI/Package
இந்த பேக்கேஜ் யாருக்கு ஏற்றது?
ஆடி மாதத்தில் மதுரையில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களை ஒரு நாளில் தரிசிக்க விரும்புபவர்கள். சொந்தமாகப் போக்குவரத்து வசதி இல்லாதவர்கள் அல்லது கோவில்களுக்குச் செல்லும் வழியில் சிரமப்பட விரும்பாதவர்கள். குடும்பத்துடன் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள திட்டமிடுபவர்கள். சிறந்த வசதிகளுடன் கூடிய பயணத்தை விரும்புபவர்கள். சுற்றுலா துறை சிறப்புப் பேக்கேஜ் மூலம், ஆடி மாதத்தின் ஆன்மீக அதிர்வுகளை முழுமையாக உணர்ந்து, அம்மனின் அருளைப் பெற இது அரிய வாய்ப்பு. முன்கூட்டியே பதிவு செய்து, உங்கள் ஆடி மாதப் பயணத்தைத் திட்டமிடுங்கள்!