மதுரைக்கு அடையாளங்கள் பல இருந்தாலும் மீனாட்சி கோவிலின் கோபுரமும், வைகை ஆறும் தான் முதலில் நினைவுக்கு வரும். அதற்கு அடுத்த இடங்களில், மதுரையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாக இருப்பது ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம். மதுரை மாநகரின் இடையே வடக்கு, தெற்காக மதுரையைப் பிரிக்கும் வைகை ஆற்றுக்குள் முதல் மேம்பாலமாக கடந்த 1886-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி கட்டப்பட்டதுதான் ஏ.வி மேம்பாலம், அதாவது ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்.
இந்த பாலமானது தமிழர்களின் பாரம்பரிய கட்டுமான முறையில் பயன்படுத்தப்படுகின்ற சுர்க்கி, சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம், முட்டை வெள்ளைக்கரு ஆகியவற்றுகளுடன் கருங்கற்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. சுமார் 250 மீ நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டது.
பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தினந்தோறும் கடந்துசெல்ல உதவும், இந்த பாலத்தின் கட்டுமானத்தின் போது மதுரையின் கோட்டைச் சுவர்களை இடித்து, அதில் கிடைத்த கற்களைக் கொண்டு வைகையாற்றுக்குள் முதல் முதலாக தரைமட்டத்தில் கல்பாலம் அமைக்கப்பட்டது. பிறகு பேரிடர் காலங்களில் சிரமம் ஏற்பட்டதால் உயர்மட்டப்பாலம் அமைக்கப்பட்டது. பாலத்தின் கட்டுமானத்திற்காக ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.2,85,697 செலவான நிலையில் மீதமுள்ள ரூ.14,303 அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டதாக பிரிட்டிஷ் காலத்து ஆவணங்கள் கூறுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வரலாற்றில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமான மதுரையின் மையப்பகுதியில் சிறப்பாக அமைந்துள்ள ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் 130 ஆண்டுகளைக் கடந்த பழமையான பெருமைக்குரிய சின்னம். கடந்த 1886 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி அப்போது வைஸ்ராயாக இருந்த எர்ல் ஆஃப் டஃப்ரைன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் இந்தப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பிறகு 1889 ஆம் ஆண்டு இந்தப் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அன்றைக்கு வேல்ஸ் இளவரசராக இருந்த ஆல்பர்ட் விக்டரின் பெயரைச் சூட்டி, ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி பல்வேறு தரப்பட்ட மக்களும் இதனைப் பயன்படுத்தும் விதமாக திறந்து வைக்கப்பட்டது.
வெறும் 50 ஆண்டுகள் மட்டுமே இந்தப் பாலத்திற்கான ஆயுள் என்று மதிப்பீடு செய்து கட்டப்பட்ட ஏ.வி பாலம் தற்போது 138 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக தனது பயணத்தை தொடர்கிறது. பெருந்தொற்றுக் காலத்தில் மதுரையின் அனைத்துப் மேம்பாலங்களும் மூடப்பட்டிருந்த போதும் இந்த ஒரு பாலம்தான் முழுவதுமாக திறந்து வைக்கப்பட்டு, நிறைய பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. மேலும், கடந்த 50 ஆண்டு காலமாக மதுரையை இரண்டாகப் பிரிக்கும் வைகையாற்றின் மேல் வடகரை மற்றும் தென்கரையை இணைக்கும் வகையில், 130 ஆண்டுகளாக முழு பயன்பாட்டில் உள்ளது.
தமிழகத்தின் முதன்மை கட்டுமானங்களுள் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்திற்கும் முக்கிய பங்குண்டு என்பதனால் இதனை தொல்லியல் பெருமையாக மட்டுமன்றி, மரபுச் சின்னமாகவும் அறிவிக்க வேண்டும்' என இந்த பிறந்த நாளில் மதுரை மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.