உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 11 துணைக் கோயில்களில் உள்ள உண்டியல்கள், 5 துணைக் கோயில்களில் உள்ள அன்னதான உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணிக்கு கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.1,18,36,973 கிடைக்கப் பெற்றது. மேலும், 427 கிராம் பலமாற்று பொன் இனங்கள், 995 கிராம் பலமாற்று வெள்ளி இனங்கள், வெளிநாடுகளின் ரூபாய் தாள்கள் 801-ம் கிடைக்கப் பெற்றது. உண்டியல்கள் திறப்பில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர், ஆய்வர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.