/indian-express-tamil/media/media_files/2025/05/08/oWh4HIR1P0TqjZtCcCAY.jpeg)
Madurai
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் என்ற இளைஞர், பயன்படுத்திய வீட்டுப் பொருட்களைக் கொண்டு அசாதாரணமான கலைச் சிலைகளை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். அழகு சிலைகள் மட்டுமல்லாது, சுவாமி சிலைகளையும் தனது கைவண்ணத்தால் உயிர்ப்பித்து வருகிறார் இந்த சாதனை இளைஞர்.
மணிகண்டன் - ஜமுனா ராணி தம்பதியின் இளைய மகனான கணேஷ்குமாருக்கு சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் தீராத காதல். தொலைக்காட்சியில் காணும் கார்ட்டூன் கதாபாத்திரங்களை காகிதத்தில் வரைவது அவருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. டிப்ளமோ வரை கல்வி பயின்ற இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபோதுதான் தனது கலைத் திறமைக்கு புதிய பரிமாணம் கொடுத்தார்.
பழைய துணிகள், பயன்படுத்திய சோப்புகள், அட்டைகள், பழைய செய்தித்தாள்கள் என வீட்டில் தூக்கி எறியப்படும் பொருட்களைக் கொண்டு அழகான கலைப் பொருட்களை உருவாக்கத் தொடங்கினார் கணேஷ்குமார். கிடைத்த ஓய்வு நேரத்தை சிலை வடிவமைப்பு கலையை கற்கவும் பயன்படுத்திக் கொண்டார்.
மதுரையின் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தை நினைவுகூரும் வகையில், தெர்மாகோல் மற்றும் சோப்பினால் தத்ரூபமான சிலையை வடிவமைத்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், பூப்பல்லாக்கு போன்ற திருவிழா காட்சிகளையும் பழைய நூல்கள், துணிகள் மற்றும் சோப்புகளைக் கொண்டு கலைச் சிற்பங்களாக மாற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் யாகசாலைகளுக்கான அலங்கார ஓவியங்கள், பூந்தட்டு அலங்காரங்களையும் தனது தனித்துவமான பாணியில் வடிவமைத்து வருகிறார்.
தனது கலைப் பயணம் குறித்து கணேஷ்குமார் கூறுகையில், “சிறுவயதில் இருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் புத்தகங்களில் உள்ள படங்களைப் பார்த்து வரைவது எனது வழக்கம். அதன் பிறகுதான் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சிலைகள் செய்ய ஆரம்பித்தேன். முதன்முதலாக மயில் மீது அமர்ந்த முருகன் சிலையை உருவாக்கியபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த உத்வேகத்தில் தொடர்ந்து செய்து வருகிறேன். எனது இந்த முயற்சிக்கு குடும்பத்தினர் முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்துகின்றனர்,” என்றார்.
கணேஷ்குமாரின் கடின உழைப்பும், புதுமையான படைப்பாற்றலும் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த உறுதுணையாக இருக்கட்டும் என்று அனைவரும் வாழ்த்துகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.