மதுரை மாநகராட்சி சார்பில் 3 நாட்கள் உணவுத் திருவிழா தமுக்கம் அருகே உள்ள மாநகராட்சி வாகன காப்பகத்தில் இன்று (ஜூலை11) கோலாகலமாகத் துவங்கியது. மேயர் இந்திராணி தலைமையில், கமிஷனர் சித்ரா துவக்கி வைத்தார்.
இந்த உணவுத் திருவிழா, மதுரையின் பாரம்பரிய உணவு வகைகளை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் சிறப்புமிக்க உணவு வகைகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளது. பந்தல் பந்தலாக அமைக்கப்பட்டிருந்த கடைகளில், பிரசித்தி பெற்ற உள்ளூர் சுவை முதல் எண்ணற்ற உணவு வகைகள் வரிசை கட்டி நின்றன. ஒவ்வொரு கடையின் முன்னாலும் உணவு ஆர்வலர்களின் கூட்டம் அலைமோதியது.
இந்தத் திருவிழாவின் சிறப்பம்சங்களில் ஒன்று, மறைந்து வரும் சில பழங்கால உணவு வகைகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்ததுதான். ஆரோக்கியமான சிறுதானிய உணவுகள், பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட இனிப்புப் பண்டங்கள், மற்றும் பல தலைமுறைகளுக்கு முன் சமைக்கப்பட்ட, ஆனால் தற்போது பரவலாகக் கிடைக்காத உணவுகள் சில கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் திருவிழாவிற்கு மேலும் மெருகூட்டின. உள்ளூர் கலைஞர்களின் கலைப் படைப்புகளும், கைவினைப் பொருட்களும் திருவிழா வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
குழந்தைகளுக்கான ஆடை அலங்காரம், கழிவுகளிலிருந்து கைவினைப்பொருட்கள் தயாரித்தல், கொழு கொழு குழந்தைகள், நெருப்பில்லா சமையல், ஓவியம் மற்றும் கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. தினமும் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளான கொம்புஇசை, பறை இசை, கரகாட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கிழவன் கிழவி ஆட்டம் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது./fit-in/580x348/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/11/food-festival-2-2025-07-11-22-04-33.jpg)
3-ம் நாளில் (ஞாயிறு) உணவு திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. உணவுத் திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் 78716 61787-ல் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.