மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 25 லட்சம் ரொக்கம் மற்றும் 482 கிராம் தங்கம் வரபெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாக இந்த தலம் கருதப்படுகிறது. சிவன் நடனமாடியதாகச் கூறப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலும் ஒன்று. புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் உள்ள நிரந்தர மற்றும் அன்னதான உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
உண்டியல்கள் திறப்பின்போது கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன், அறங்காவலர்குழுத் தலைவர் அவரது பிரதிநிதி, அறங்காவலர்கள், மதுரை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், கோவில் கண்காணிப்பாளர்கள், மதுரை (தெற்கு) மற்றும் கள்ளிக்குடி சரக ஆய்வர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் உடனிருந்தனர்.
உண்டியல்களில் இருந்து ரூ.1,25,91,921/- (ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சத்து தொண்ணூற்றி ஓராயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து ஒன்று மட்டும்) ரொக்கம், 482 கிராம் தங்கம், 846 கிராம் வெள்ளி மற்றும் 260 எண்ணிக்கையிலான வெளிநாட்டு பணம் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“