மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின் இணைப்பு தொடர்பாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட தகவலின் படி, கோயிலுக்கு மின் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக நிலுவைத் தொகை இருப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், நிலுவைத் தொகையை சரிசெய்யும் வரை மின்சாரம் வழங்க முடியாது என்றும், தேவையெனில் தற்காலிக மின் இணைப்பை கோரி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இச்சூழல், எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள சித்திரை திருவிழா ஏற்பாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 15 நாட்கள் நடைபெறவுள்ள விழாவில்,
மே 6 - மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே 8 - திருக்கல்யாணம், மே 9 - திருத்தேரோட்டம், மே 11 - கள்ளழகர் எதிர்சேவை, மே 12 - வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. இதனையொட்டி, வைகை அணையிலிருந்து மே 8ஆம் தேதிக்கு பிறகு விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/04/13/dK2qp5s39GMrT3fUiAAF.jpg)
மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சித்திரை திருவிழா மற்றும் அதனை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும், விழா நடைபெறும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மின் இணைப்புக்கான நிலுவைத் தொகை சரிசெய்யப்படாதிருப்பது விழா ஏற்பாடுகளில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.