மதுரை மாவட்டத்தின் அடையாளமாக கருதப்படும் சித்திரை திருவிழா, வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவின் ஒரு அங்கமாமான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம், வரும் மே மாதம் 8-ஆம் தேதியன்று நடைபெறுகிறது.
இதனைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு இரண்டு வகையான டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளன. ரூ. 200 மற்றும் ரூ. 500 என இந்த டிக்கெட்டுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரூ. 200 மற்றும் ரூ. 500-க்கான டிக்கெட் பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், டிக்கெட் பெறாதவர்கள் இடவசதிக்கு ஏற்ற வகையில் தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்டுகளை ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக, https://hrce.tn.gov.in மற்றும் https://madurai meenakshi.hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களை பக்தர்கள் பயன்படுத்தலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ரூ. 500 மதிப்புள்ள டிக்கெட்டை அதிகபட்சமாக இரண்டு வரை ஒரு நபர் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல், ரூ. 200 மதிப்புள்ள டிக்கெட்டை அதிகபட்சமாக மூன்று வரை ஒரு நபர் முன்பதிவு செய்ய முடியும். மேலும், ஒரு நபருக்கு இரண்டு வகையான டிக்கெட்டையும் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணையம் வாயிலாக இந்த டிக்கெட்டை பெற விரும்புபவர்கள் தங்கள் ஆதார், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை அளித்து பெற்றுக் கொள்ளலாம். இது தவிர, கோயில் அருகே இருக்கும் மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கு விடுதியில் நேரடியாகவும் இந்த டிக்கெட்டை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.