/indian-express-tamil/media/media_files/2025/05/05/borK5wiykHGf8RJiMgUW.jpg)
மதுரை சித்திரை பொருட்காட்சி தொடக்கம்
மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. மே 6-ம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், 8-ம் தேதி திருக்கல்யாணம், 9-ம் தேதி தேரோட்டம், 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் மதுரை வந்து செல்வார்கள். இவர்களுக்காக மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடத்தப்படும். பொருட்காட்சியை பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் சங்கீதா, காவல் ஆணையர் ஜெ.லோக நாதன், கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, மேயர் இந்தி ராணி, ஆணையர் சித்ரா, எம்எல்ஏக்கள் தளபதி, பூமி நாதன், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கூடுதல் இயக்குநர் பாஸ்கரன், துணை இயக்குநர் தமிழ் செல்வராஜன், மதுரை மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதி, துணைமேயர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மே 4 முதல் ஜூன் 17 வரை 45 நாட்கள் பொருட்காட்சி நடக்கிறது. இதில் தமிழக அரசு சார்பில் 26 மாநகராட்சி உட்பட, அரசு சார்பு துறைகள் சார்பில் 6 என 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுக் கூடங்கள் உள்ளன.
பொருட்காட்சியில் பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10. பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 என நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினமும் மதியம் 4:00 முதல் இரவு 10:00 மணி வரை நடைபெறும்.
மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி சுவாமி வீதி உலா, வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு, தமுக்கத்தில் ஆண்டுதோறும் 45 நாட்கள் நடைபெறும் சித்திரை பொருட்காட்சி சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பொழுதுபோக்கும் இடமாக இருக்கும். சித்திரைத் திருவிழாவுக்கு இந்த ஆண்டு 20 லட்சம் பக்தர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மாநகராட்சி கணித்துள்ளது. மதுரையில் கடந்தாண்டு பொருட்காட்சியை 82 ஆயிரத்து 272 பேர் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.