அமெரிக்காவின் நியூயார்க் நகரில், தென்னிந்திய உணவகம் ஒன்று தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஆண்டுதோறும் வெளியாகும் நியூயார்க் நகரின் சிறந்த 100 உணவகங்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது என்பது சாதாரண நிகழ்வல்ல. ஆனால், நியூயார்க் நகரின் கிரீன்விச் வில்லேஜ் பகுதியில் அமைந்துள்ள 'செம்ம' என்ற தமிழக உணவகம், அணுமிஸ் மற்றும் லெ பெர்னார்டின் போன்ற பிரபல உணவகங்களைப் பின்னுக்குத் தள்ளி இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஜய்குமாரின் கனவுத்திட்டமான 'செம்ம' (அற்புதம் என்று பொருள்) 2021-ல் தொடங்கி 4 ஆண்டுகளில் 2025-ம் ஆண்டுக்கான பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே பட்டியலில் 'செம்மா' 7வது இடத்தில் இருந்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்திய உணவு உலக அளவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அங்கீகாரத்தைப் பெற்று வரும் வேளையில், 'செம்ம' வளர்ச்சி தனிப்பட்டதாக அமைந்துள்ளது. "இது நம்பமுடியாத கவுரவம், குறிப்பாக தென்னிந்திய கிராமப்புற உணவுகளைப் போற்றும் உணவகத்திற்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி" என்று 44 வயதான விஜய்குமார், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் உடனான பிரத்யேக நேர்காணலில் தெரிவித்தார். "எங்கள் உணவு, அதன் உண்மையான வடிவில், உலக அரங்கில் இடம்பிடிக்க முடியும் என்பதற்கான அங்கீகாரமும் கூட இது" என்றார் அவர்.
மதுரைக்கு அருகிலுள்ள பண்ணையில் வளர்ந்த விஜய், தனது தாயார் மற்றும் பாட்டியின் சமையலைப் பார்த்து, அவர்களுக்கு உதவியதன் மூலம் சமையல் கலையைக் கற்றுக்கொண்டார். சமையல் பள்ளிப் படிப்பு மற்றும் இந்திய ஹோட்டல்கள், சொகுசுக் கப்பல்களில் பணிபுரிந்த பிறகு, அமெரிக்காவுக்குச் சென்று, கலிபோர்னியாவில் உள்ள டோசா மற்றும் ராசா போன்ற உணவகங்களில் தலைமை சமையல்காரராகப் பணியாற்றினார். 2021-ல், நியூயார்க் சென்று 'செம்ம' என்ற உணவகத்தைத் தொடங்கினார். உணவக மெனுக்களில் அரிதாகக் காணப்படும் உள்ளூர், பாரம்பரிய உணவுகளைப் பரிமாறுவதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. இறால் தொக்கு, நத்தை பிரட்டல் மற்றும் திணை கிச்சடி போன்ற சில உணவுகள் இதில் அடங்கும். "நத்தை பிரட்டல் போன்ற உணவை நீங்கள் வேறு எங்கும் காண முடியாது. இது நான் வளர்ந்த காலத்தில் சாப்பிட்ட உண்மையான கிராமத்து உணவு" என்று விஜய் பெருமிதத்துடன் கூறினார்.
உணவக உரிமையாளர் ரோனி மஜும்தார் மற்றும் உனாபொலஜடிக் ஃபுட்ஸ் (Unapologetic Foods) நிறுவனத்தின் சமையல் கலைஞர் சிந்தன் பாண்டியா ஆகியோருடனான கூட்டாண்மைக்குப் பிறகுதான். "அவர்கள் என்னிடம் எளிய விஷயத்தைக் கேட்டார்கள்: 'உங்கள் எலும்புகளில் வாழும் உணவை சமைக்கவும்'. அதுதான் 'செம்ம' உணவகமாக மாறியது. நான் வளர்ந்த காலத்தில் சாப்பிட்ட துணிச்சலான, ஆன்மார்த்தமான உணவுகளை எந்தவித சமரசமும் செய்யாமல் கொண்டாடும் இடமாக இது அமைந்தது" என்று விஜய் கூறினார்.
இந்தத் தத்துவம் வெற்றியை கொடுத்தது. 'செம்ம' உணவகத்தின் அண்மைய முதலிட அங்கீகாரத்துடன், "உணவு உலகின் ஆஸ்கார்" என்று அழைக்கப்படும் மதிப்புமிக்க 2025 ஆம் ஆண்டுக்கான ஜேம்ஸ் பியர்ட் விருதை, "சிறந்த சமையல் கலைஞர்: நியூயார்க் மாகாணம்" என்ற பிரிவில் அவர் வென்றுள்ளார்.
உள்ளூர் மற்றும் பருவகாலப் பொருட்களைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கும் விஜய், நிலத்துடனும் மக்களுடனும் ஆழமாகப் பிணைக்கப்பட்ட ஒன்றால்தான் உந்தப்படுவதாகக் கூறினார். "இதுவரை அறியப்படாத உள்ளூர் பொருட்களை மேலும் ஆராய்ந்து, அவற்றை உலக மேடைக்குக் கொண்டுவர விரும்புகிறேன்" என்றார் அவர்.
இந்திய சமையல் கலைஞர்களும் உணவக உரிமையாளர்களும் உலக அரங்கில் வெற்றிபெறவும், சவால்களை எதிர்கொள்ளவும் என்ன காரணம்? சமையல் கலைஞர் விஜய்யின் கூற்றுப்படி, உணவின் சுவையிலோ அல்லது தரத்திலோ எந்த சமரசமும் செய்யாமல் இருப்பதே ஆகும்: "பாதுகாப்பாக விளையாடுவதற்காக எதுவும் சரிசெய்யப்படுவதில்லை. இது துணிச்சலானது, வேரூன்றியது மற்றும் ஆழ்ந்த தனிப்பட்டது."
"நீண்ட காலமாக, இந்திய சமையல் கலைஞர்கள் எங்கள் உணவை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மென்மையாக்கவோ (அ) எளிதாக்கவோ வேண்டிய அழுத்தத்தை உணர்ந்தனர்" என்று அவர் கூறினார். "இப்போது, நாங்கள் சத்தமாகவும் பெருமையுடனும் சமைக்கிறோம். புதுமை என்பது நமது சொந்த மரபுகளுக்குள் திரும்பிப் பார்த்து, அவற்றை எந்த சமரசமும் இல்லாமல் முன்வைப்பதன் மூலம் வருகிறது." 'செம்மா'வின் அடுத்தது என்ன? விஜய் தெளிவாகக் கூறுகிறார்: "பிராந்திய சமையல் குறிப்புகள், மறக்கப்பட்ட நுட்பங்கள் மற்றும் அவற்றுக்குப் பின் உள்ள கதைகளை இன்னும் ஆழமாகத் தோண்டுவது. மேலும், 'செம்மா'வை சிறப்புறச் செய்யும் உண்மையான தென்னிந்திய உணவை, மனதார சமைப்பதை இழக்காமல் தொடர்ந்து வளர்ச்சியடைவது."