மதுரை மாநகரக் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு மத்திய அரசின் உத்கிரிஷ்ட் சேவா பதக்கங்கள் வழங்கப்பட்டன.
தமிழகக் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகளை மதிப்பளிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் உத்கிரிஷ்ட் சேவா பதக்கங்களை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டிற்கான விருதுகளுக்காக, மதுரை மாநகரக் காவல் துறையைச் சேர்ந்த காவல் கூடுதல் துணை ஆணையர் (போக்குவரத்து திட்டமிடுதல்) ஏ.திருமலைக்குமார், நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் ஆர். எஸ்தர், தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் எஸ். அருண்குமார், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் என். ஹேமமாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகர ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் அவர்கள் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
விருது பெற்றவர்களை வாழ்த்திய அவர், "காவல் துறையின் சிறந்த சேவையை வெளிப்படுத்தும் இந்த விருது, அதிகாரிகளை மேலும் ஊக்குவிக்கும்" எனக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) ராஜேஸ்வரி, தல்லாகுளம் போக்குவரத்து உதவி ஆணையர் இளமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.