மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கான பாலின மறு சீரமைப்பிற்கான பன்நோக்கு உயர் சிகிச்சை சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறை, தேசிய சுகாதார இயக்கம் வழி காட்டுதலின் பேரில், திருநங்கை மற்றும் திருநம்பி என மூன்றாம் பாலினத்தவர்களுக்கென இந்த சிறப்பு பிரிவு செயல்படுகிறது. அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை இப்பிரிவினருக்கு என உரிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
இப்பிரிவில் பிறப்புறுப்பு, கர்ப்பப்பை மாற்றுவது, செயற்கை மார்பகம் பொருத்துவது, தேவையற்ற முடிகளை நீக்குதல், குரல் மாற்ற சிகிச்சை, பாலின மாற்ற ஹார்மோன் சிகிச்சை, பால்வினை நோய் தடுப்பு சிகிச்சை உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கென பலதரப்பட்ட 738 நபர்களுக்கு சிகிச்சைகள், உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
இச்சிறப்பு பிரிவானது மருத்துவ நிபுணர் குழுவுடன், தனி வார்டில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, 236 பேருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு சுமார் ரூ. 1 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் செலவாகும் நிலையில், இந்த அரசு மருத்துவமனையில் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படுகிறது.
"மூன்றாம் பாலினத்தவருக்காக 8 இடங்களில் சிகிச்சை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், மதுரையில் வழங்கும் சிறப்பு சிகிச்சைக்கு அதிகளவில் வரவேற்பு இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து கூட இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்" என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.