மதுரை ஸ்பெஷல் ’கறி தோசை’... சும்மா அப்படி இருக்கும் போங்க!!!!

கொத்தமல்லி தூவி கமகமன்னு சமைக்கும் போதும் வரும் வாசனைக்கே அந்த கடை முன்னாடி திருவிழா போல் ஜனம் கூடும்.

என்னதான் மதுரைக்கு பெருமை  மீனாட்சி அம்மன், மல்லி, மண் வாசம், ஜல்லிக்கட்டுனு நீண்டாலும், மதுரைக்கு ஸ்பெஷலான கறி தோசைக்கு எப்பவுமே மவுசு கூட தான். அதுவும், மதுரை கோனார் மெஸ்ஸில் கிடைக்கும் கறி தோசை என்றால்  பலருக்கும் கொள்ளை பிரியம்.

சைவத்தை விட மதுரை அசைவத்திற்கு தான் பிரசித்தி. அதுவும் அவர்கள் அரைக்கும் மசாலா பொடியின் ரகசியம் இதுவரை யாருக்குமே முழுசாக தெரியாது(அந்த ஊர் காரர்களை தவிர) .  மட்டன் கறியை மைய சமைத்து அதை தோசை மாவுடன் சேர்த்து, கொத்தமல்லி தூவி கமகமன்னு  சமைக்கும் போதும் வரும் வாசனைக்கே அந்த கடை முன்னாடி திருவிழா போல் ஜனம் கூடும்.

இப்படி சொல்லும் போதே சாப்பிட தோணும் கறி தோசையை ருசி பார்க்க  ஒவ்வொரு முறையும்  மதுரை வரை போயிட்டு வர முடியுமா? அதனால் தான்,  மதுரைக்காரர் ஒருவரை அழச்சிட்டு வந்து, கறி தோசையை எப்படி வீட்டிலேயே செய்யயுருதுனு ரகசியமா கேட்டோம்.  அதுக்கு அவர் சொன்னார் பாருங்க ஒரு  கதை முடியல்ல… அது எல்லாத்தையும் எடிட்டிங்கில் தள்ளிட்டு செய்முறைய மட்டும் எடுத்துகிட்டோம்…

இதோ மணமணக்கும் மதுரை கறி தோசை செய்முறை: 

தேவையான பொருட்கள்: 

1.  மட்டன் கொத்து கறி – 200 கிராம்

2. தோசை மாவு – ஒரு கப்

3. வெங்காயம் – தக்காளி தலா 1

4. முட்டை – 3

5. இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்

6. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

7.மல்லி தூள் – 3/4 ஸ்பூன்

8.கரம் மசாலா – 1/2 ஸ்பூன்

9, மிளகு தூள் – 1 ஸ்பூன்

10.மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

11. சீரகதூள் – 1/2 ஸ்பூன்

12.எண்ணெய் – 3 ஸ்பூன்

13.கடுகு

14. சோம்பு

15. உப்பு

செய்முறை: 

 * முதலில் மட்டனை மிளகாய் தூள், மற்றும் உப்பு  சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு பஞ்சு போல்  வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

*பின்பு, முட்டையை உடைத்து ஊற்றி, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து உப்பு சேர்க்காமல் நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு, அடுப்பில் தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி விட்டு தக்காளி சேர்த்து தளதளவென வதக்க வேண்டும்.
*அத்துடன் மிளகு தூள் தவிர மற்ற தூள் வகைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு,  வேக வைத்த கறியை தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாக கிரேவி போல் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* இப்போது தான் மெயின் ப்ரோசஸ்… அடுப்பை சில்லிம் வைத்து தோசை மாவை ஊத்தப்பம் போல் ஊற்ற வேண்டும். அது லேசாக வெந்ததும் ஒரு கரண்டி முட்டை கலவையை ஊற்றவும்.
*பின்பு, அதன் மேல் ஒரு கரண்டி கறியை வைத்து பரப்பி விடவும்.பின்பு, மிளகு தூளை பரபரவென தூவி , அதிகளவு எண்ணெய்யை சுற்றி ஊற்றி, கொத்தமல்லியை தூவி,   திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்..
*1 நிமிடம் கழித்து எடுத்தால்,  கமகமக்கும் மதுரை கறி தோசை தயார்.. அப்படியே சாப்பிட வேண்டியது தான்..

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close