மதுரையில் சின்ன சித்திரத் திருவிழா என்று அழைக்கப்படும் தைப்பூசத் தெப்பத் திருவிழா இம்மாதம் ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, மீனாட்சி - சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன், காலை , மாலையில் கோயிலை சுற்றிலும் நான்கு சித்திரை வீதிகளிலும் புறப்பாடாகி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் பிப்ரவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் திருஞானசம்பந்தர் சுவாமிகள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 7 ஆம் தேதி விழாவின் 8 ஆம் திருநாள் மச்சகந்தியார் திருமணக் காட்சியும், 8 ஆம் தேதி விழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக இரவு சப்தாவரணமும், 9 ஆம் தேதியன்று 10 ஆம் திருநாள் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்வும், 10 ஆம் தேதியன்று 11 ஆம் திருநாள் கதிரறுப்பு நிகழ்வும், 11 ஆம் தேதி 12 ஆம் திருநாளாக தெப்ப உற்சவம் நடைபெறவுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/860f8e08-fd8.jpg)
11 ஆம் தேதி தெப்ப உற்சவத்தையொட்டி, அதிகாலையில் மீனாட்சி - சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலிலிருந்து புறப்பாடாகி, மாரியம்மன் தெப்பக்குளம் செல்கின்றனர். அங்கு அலங்கரித்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். தெப்பம் சேவார்த்திகளால் வடம் பிடித்து, காலையில் இரண்டு முறை சுற்றி வருவார்கள். இதன்பின், மாலையில் தெப்பக்குள மைய மண்டபத்தில் எழுந்தருளி பத்தி உலாத்தி தீபாராதனை நடைபெறுகிறது. மீண்டும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி இரவில் ஒரு முறையும் தெப்பம் சுற்றி வரும்.
/indian-express-tamil/media/post_attachments/77e7e147-af1.jpg)
தெப்பத் திருவிழா நாளில் பக்தர்களுக்கென கலைக்கூடம் (ஆயிரங்கால் மண்டபம்) திறந்து வைக்கப்படும். உள்ளே வருவோர் வடக்கு கோபுரம் வாசல் வழியாக காலை 7 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவர். இத்தகைய திருவிழாவினை கொண்டாட மதுரை மக்கள் விறுவிறுப்பாக தயாராகி வருகிறார்கள்.