மதுரை – போடி அகல ரயில் பாதையில் மின்சார ரயில் சேவை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. மதுரையிலிருந்து தேனி மாவட்டம் போடி வரை பழைய மீட்டர்கேஜ் ரயில் பாதை அகல ரயிலாக மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் 15 முதல் போடி – சென்னை இடையே எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, போடி – மதுரை வழித்தடம் முழுவதும் 25,000 வோல்டேஜ் திறனுடன் மின்மயமாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மின்சார ரயில் இன்ஜினுடன் சோதனை ஓட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் ரயிலை இயக்கி பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, ஆண்டிபட்டி கணவாய் மற்றும் பூதிப்புரம் பாலம் போன்ற முக்கிய இடங்களில் வேகத்தைக் குறைத்து சோதனை செய்யப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/bc4dfcf8-a4f.jpg)
முதல் மின்சார ரயில் சேவை
நேற்று காலை, சென்னை – போடி எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை ரயில் நிலையம் வந்தடைந்த பின்னர், மின்சார பாதையில் பயணிக்க 7.26 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் காலை 9.48 மணிக்கு போடி ரயில் நிலையம் வந்தடைந்தது. அதேபோன்று, மதுரை – போடி பயணிகள் ரயில் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.58 மணிக்கு போடியில் அடைந்தது.
பயண நேர விபரங்கள்
வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் – போடி எக்ஸ்பிரஸ், மதுரை ரயில் நிலையத்தில் காலை 7.10 மணிக்கு வந்து, 7.15 மணிக்கு புறப்பட்டு 9.35 மணிக்கு போடி சென்றடையும்.
போடி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், போடியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடைந்து, 10.50 மணிக்கு சென்னைக்குப் புறப்படும்.
மதுரை – போடி – மதுரை பயணிகள் ரயில், மதுரையில் இருந்து தினமும் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு போடி ரயில் நிலையம் அடையும். போடியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு மதுரையில் வந்து சேரும்.
இந்த மின்சார ரயில் சேவை தொடங்கியதனால், மதுரை – போடி இடையேயான பயண குறைவதோடு, பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.