மதுரை மாநகராட்சியின் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வண்டியூர் கண்மாய் பூங்கா மேம்பாட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 70% பணிகள் முடிந்த நிலையில், ஜூலைக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதன்முறையாக, இந்த கண்மாயில் காற்று நிரப்பிய பைபர் குடுவைகள் கொண்ட 'பிலோட்டிங் செட்டி' என்ற 500 சதுர மீட்டர் மிதவை நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இதுதான் முதல் முறையாக நடைபாதை இப்படியான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது.
550 ஏக்கர் பரப்பளவில் உள்ள வண்டியூர் கண்மாயின் கரையோரத்தில் 3 கிமீ நீள நடைபாதை மற்றும் 3 கிமீ மிதிவண்டி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தியானம் மற்றும் யோகா வளாகம், திறந்த வெளி சந்திப்பு அரங்கம், சிறுவர்களுக்கான விளையாட்டு வசதிகள், மூன்று இடங்களில் கழிப்பறைகள், நிரூற்றுகள், மின்விளக்குகள், மலர் மற்றும் மூலிகை செடிகள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.
கண்மாயின் வரத்து கால்வாயில் 4 சிறிய பாலங்கள், இரு இடங்களில் அழகிய பூங்கா நுழைவு வாயில்கள் போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டு வருகின்றன. இது, மதுரையின் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மையமாக வளர்த்தெடுக்கப்படும் முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.