அம்பிகைக்கு நவராத்திரி... ஈசனுக்கு ஒரு ராத்திரி... அது சிவராத்திரி.
மாசி மாதத்தில், தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற மகா சிவராத்திரி கூடுதல் புண்ணியங்களையும் பலன்களையும் தரக்கூடியது.
சிவராத்திரி நன்னாளில் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகும்; கர்ம வினைகள் யாவும் நீங்கும் என விவரிக்கிறது சிவ புராணம்.
இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி வரவுள்ளது.
மகா சிவராத்திரி விரதம்
மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். இயலாதவர்கள், இரவுப் பொழுதில் எளிமையான உணவை எடுத்துக் கொள்ளலாம்.
மகாசிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, வீட்டில் உள்ள சிவபெருமானின் படத்திற்கு ஆராதனை செய்து வழிபட வேண்டும். தொடர்ந்து, அருகில் உள்ள சிவாலயத்துக்கு சென்று தரிசனம் மேற்கொள்ள வேண்டும். மாலையில் மீண்டும் குளித்துவிட்டு, சிவபூஜையை இல்லத்தில் செய்ய வேண்டும். அன்று இரவு அருகில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடுவது மகத்துவம் மிக்கது.
இந்த பூஜையின் போது ’சிவாய நம’ என்றோ ‘நமசிவாய’ என்றோ மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும். அன்றைய தினம் இரவில் உறங்காமல், நான்கு வேளையும் நடைபெறும் பூஜைகளை தரிசித்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், தயிர்சாதம் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து சிவனை வழிபட வேண்டும். பிறகு, நம்மால் முடிந்த தானங்களை ஏழைகளுக்கு வழங்கி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாம பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
சிவராத்திரி விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம்.
சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைப்பிடித்தால் நம் இல்லத்தில் உள்ள தரித்திரம் விலகும். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும். இல்லத்தில் தனம், தானியம் பெருகும். முக்கியமாக, முக்திப் பேறு அடையலாம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“