மகாளய அமாவாசை: நீர்நிலைகளில் அலைமோதிய பொதுமக்கள்; ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் ஒரு முக்கிய நாள். ஆவணி பௌர்ணமிக்குப் பிறகு வரும் 15 நாட்களும் 'மகாளய பட்சம்' எனப்படும். இந்த நாட்களில் முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்கள் குடும்பத்தினரை சந்திக்கிறார்கள் என்பது நம்பிக்கை.

மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் ஒரு முக்கிய நாள். ஆவணி பௌர்ணமிக்குப் பிறகு வரும் 15 நாட்களும் 'மகாளய பட்சம்' எனப்படும். இந்த நாட்களில் முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்கள் குடும்பத்தினரை சந்திக்கிறார்கள் என்பது நம்பிக்கை.

author-image
WebDesk
New Update
mahalaya amaavaasai

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை 'மகாளய அமாவாசை' என்று போற்றப்படுகிறது. ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் தொடங்கி, அடுத்து வரும் 15 நாட்களும் 'மகாளய பட்சம்' என்று சொல்லப்படுகிறது. மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசையாகும்.

Advertisment

இந்த மகாளயபட்ச 15 நாட்களில் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம். முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான், பூமியில் உள்ள அவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு வருடமும், முன்னோர் இறந்த திதி நாளை கணக்கில் கொண்டே திதி கொடுக்கப்படுகிறது.

அது தவிர ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்கிறார்கள். இவ்வாறு, முன்னோர் திதி நாள், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்ய தவறியவர்கள் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம். முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட மகாளய பட்சத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

பொதுவாக அமாவாசை நாட்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ஆனால், மகாளய அமாவாசையன்று தாய்வழி, தந்தைவழி உறவினர்களுக்கு மட்டுமில்லாமல், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், பங்காளிகள் என்று அனைவருக்குமே தர்ப்பணம் கொடுக்கலாம். இதுவே இந்த மகாளய அமாவாசையின் தனிச் சிறப்பாகும்.

Advertisment
Advertisements

மகாளய பட்ச காலத்தில் முன்னோர்கள், அவர்களின் சந்ததியினர் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அன்றைய தினம் அவர்களுக்கு பிடித்த உணவை படைக்கிறார்கள். பித்ருக்கள் வழிபாட்டில் கருப்பு எள்ளும், தர்ப்பை புல்லும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தர்ப்பணத்தின்போது முன்னோர்களுக்கு கொடுக்கும் எள்ளும், தண்ணீரும் தான் அவர்களுக்கான உணவாக கருதப்படுகிறது.  அந்தவகையில், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரையில் தர்ப்பணம் செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும் எனக் கருதுவதால் தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சிறப்பு வாய்ந்த புரட்டாசி மகாளய அமாவாசையான இன்று பல்லாயிரக்கணக்கானோர் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தத்தம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

mahalaya amaavaasai

பின்னர் அங்குள்ள விநாயகர், காவிரிதாய், விஷ்ணு உள்ளிட்ட தெய்வங்களுக்கு விளக்கேற்றி வழிபட்டனர்.   திருச்சியில் காவிரி ஆறு செல்லும் படித்துறைகள் மற்றும் திருப்பராய்த்துறை, கல்லணை என பல்வேறு இடங்களிலும், அண்டை மாவட்டமான தஞ்சையில் காவிரி படித்துறை, திருவையாறு புஷ்யமண்டப துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

பின்னர் ஐயாறப்பர் கோவிலில் சென்று சம்ஹார மூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதேபோல், டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளிலும், கும்பகோணம் மகாமக குளக்கரையிலும், வேதாரண்யம், கோடியக்கரை, காவிரி கலக்கும் பூம்புகார் கடற்கரைகளிலும் புனித நீராடி தத்தம் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். 

மகாளய அமாவாசை என்பதாலும், வாராந்திர விடுமுறை தினம் என்பதாலும் திருச்சியில் காணும் இடங்களில் எல்லாம் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விலையும் எகிறியது.    திருச்சி மாநகர போலீஸார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறியதை காணமுடிந்தது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: