புரட்டாசி மாதம் அமாவாசைக்கு முன் வரக்கூடிய பெளர்ணமி திதிக்கு மறுநாளிலிருந்து அமாவாசை வரை உள்ள காலம் மகாளயபட்ச காலம் ஆகும். மகாளயபட்சமான இந்த 15 நாட்களிலும் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து, தங்கள் சந்ததியினருடன் தங்கி, உணவு அருந்துகின்றனர் என நம்பப்படுகிறது.
அத்தகைய சூழ்நிலையில் முன்னோர்களின் ஆத்ம திருப்திக்காக இந்த நாட்களில் சிரார்த்தம், தர்ப்பணம் மற்றும் தானம் செய்தல் போன்றவை அவசியமாகும். முன்னோர்களின் ஆசியை பெற்றால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பெருகும். முன்னோர்களின் ஆசி வாழ்க்கையில் வெற்றியையும், செல்வத்தையும் தேடி தரும்.
மகாளயபட்சத்தில் பித்ரு லோகத்தில் இருந்து நம்மை தேடி வரும் முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து அவர்களின் பசியை போக்குவதோடு, பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கும் உணவு கொடுப்பதனால், நம்முடைய பல தலைமுறையினருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக சந்ததிகளின் வாழ்க்கையில் இருக்கும் தடை மற்றும் துன்பங்கள் என அனைத்தும் நீங்கும்.
மகாளயபட்சத்தில் ஏழை, எளியோர் மற்றும் பிராமணர்களுக்கு அன்னதானம் கொடுப்பதோடு, ஆடைகளையும் தானம் செய்ய வேண்டும். வேட்டி, துண்டு போன்றவற்றை தானமாக கொடுக்கலாம். மகாளயபட்ச காலத்தில் கருப்பு எள்ளை தானம் செய்வதன் மூலம் அனைத்து தடைகளிலிருந்தும் விடுதலை பெறலாம். இதுமட்டுமின்றி கிரகங்களினால் ஏற்படும் தடைகள் விலகும். மேலும், நெருக்கடிகள் நீங்கும் என்ற ஐதீகத்தால் பொதுமக்கள் நீர்நிலைகளில் கூடி தத்தம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர்.
அந்தவகையில், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரையில் தர்ப்பணம் செய்தால் கோடி புண்ணியம் எனக்கருதுவதால் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சிறப்பு வாய்ந்த மகாளய அமாவாசையான இன்று பல்லாயிரக்கணக்கானோர் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, ஓயாமரி எதிரே காவிரி படித்துறை என திருச்சி காவிரி கரையில் தத்தம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பல்லாயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் கூடியதால் ப்ரோகிதர்கள் கிடைக்காமல் வரிசைக்கட்டி நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருச்சி மட்டுமல்லாது புறநகரில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ப்ரோகிதர்கள் அம்மாமண்டப படித்துறையில் குவிந்திருந்தனர். இதை காரணம் காட்டி போலி ப்ரோகிதர்களும் சடங்குகள் செய்து பொதுமக்களை ஏமாற்றியதும் சில இடங்களில் அரங்கேறியது.
இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதால் பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தீயணைப்புத்துறை வீரர்கள் ஆற்றுக்குள் ரப்பர் படகுகளை தயார் நிலையில் வைத்து, தண்ணீரில் சென்று பிண்டங்களை கரைக்கும் பொதுமக்களை எச்சரித்து வந்தனர்.
காவிரி கரையில் தத்தம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள் அங்கிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை சென்று வழிபட்டனர். பின்னர், மலைக்கோட்டை விநாயகர் கோவிலுக்கும் சென்று வழிபாடு நடத்தி, ஏழை எளியோருக்கு அன்னதானம் கொடுத்தனர்.
புரட்டாசி மகாளய அமாவாசை என்பதாலும், காந்தி ஜெயந்தி விடுமுறை தினம் என்பதாலும் திருச்சியில் காணும் இடங்களில் எல்லாம் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பூஜை பொருட்களின் விலையும் எகிறியது. திருச்சி மாநகர போலீஸார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறியதை காணமுடிந்தது.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.