/indian-express-tamil/media/media_files/2025/09/07/desa-mangayarkarasi-2025-09-07-16-32-49.jpg)
நமது கலாச்சாரத்திலும், ஆன்மிகத்திலும் முன்னோர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்கள் ஆசி இன்றி எந்த ஒரு காரியமும் முழுமையடையாது. இந்த முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கு சிறந்த காலமாகக் கருதப்படுவது மகாளய பக்ஷம் என்று தேச மங்கையர்கரசி கூறுகிறார். இது குறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு முந்தைய 14 நாட்கள் மகாளய பக்ஷம் காலம் என அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் நமது முன்னோர்கள் அனைவரும் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வந்து நம்முடன் தங்குவார்கள் என நம்பப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில், நாம் அவர்களுக்குச் செய்யும் எந்த ஒரு தானமும், தர்மமும், வழிபாடும் நேரடியாக அவர்களைச் சென்றடையும். ஆண்டு முழுவதும் முன்னோர்களுக்குத் திதி கொடுக்க இயலாதவர்கள் கூட, இந்த 14 நாட்களிலும் முறையாக வழிபாடு செய்வதன் மூலம், அனைத்து முன்னோர்களுக்கும் திதி கொடுத்த பலனைப் பெற முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு என்றார்.
வழிபாட்டு முறைகள்
மகாளய பக்ஷம் காலத்தில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை அவர் தெளிவாக எடுத்துரைத்தார். தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிக்குள் எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த நீரை கால் படாத இடத்தில் ஊற்றுவது மிகவும் முக்கியம். தர்ப்பணம் செய்த பிறகு, சூரிய பகவானை நோக்கி, "இது முன்னோர்களுக்குச் சென்றடைய வேண்டும்" எனப் பிராத்தனை செய்ய வேண்டும். மதிய நேரத்தில் ஒருவருக்காவது அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பானது. மேலும், மாலை நேரத்தில் பூஜை அறையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி முன்னோர்களை நினைத்து வழிபடலாம்.
2025-ஆம் ஆண்டின் முக்கிய தேதிகள்
மகாளய பக்ஷம் தொடங்கும் நாள்: செப்டம்பர் 8, 2025
மகாபரணி: செப்டம்பர் 12, 2025
மகாளய அமாவாசை: செப்டம்பர் 21, 2025
யார் விரதம் இருக்கலாம்?
ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும் அவர் விளக்கினார். தந்தை அல்லது தாய் இல்லாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள் அல்லது மனைவி இல்லாதவர்கள் என ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். பெண்கள் எள்ளும் தண்ணீரும் இறைக்க கூடாது. அதற்கு பதிலாக மதிய உணவு படைக்கலாம் மற்றும் மாலையில் விளக்கேற்றலாம். முக்கியமாக, கணவர் இருக்கும்போது மனைவி இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.